மீள்தன்மைமட்டு

Tuesday, May 18, 2010

கதை ஒன்று; அநேகருக்குத் தெரிந்த பழைய கதைதான்; ஆனால், சந்தர்ப்பத்துக்குத் தேவைப்படுவதாலே ஆங்காங்கே சின்னச் சீர்திருத்தம், பாத்திரமாற்றம் செய்து திரும்பச் சொல்வதினாலேதும் குறையப்போவதில்லை.

கதை இது; விவசாயி ஒருத்தன்; மனைவி + ஆறு குழந்தைகள் + அவன் பெற்றோர் + மனைவியின் பெற்றோர்; இத்தனை பேரும் வசிப்பது ஒரு குடிசை. வெளியிலே தொழுவத்தில் நான்கு பசுக்கள், இரண்டு காளைகள், கன்றுகள் சில; அருகே கூட்டுக்குள் கோழிகள், சேவல்கள் & குஞ்சுகள். மேலதிகமாக நாய் இரண்டு & நினைத்தால் வந்துபோகும் பூனைக்குடும்பம் (குடும்பக்கணக்கிலே போட்டுக்கொள்ளலாம்). வண்டில் ஒன்று. பன்னிரண்டு பேர் அமுங்கிக்கொள்வது கஷ்டமென்றும் ஆண்டைப்பண்ணையாரிடம் ('பார்முலா வில்லன்' பாத்திரம் வேண்டாமா?) குடிசையைக் கொஞ்சம் பெரிதுபடுத்தித்தரவேண்டுமென்று கேட்கப்போவதாகவும் விவசாயி சொல்கிறான். "கேட்டால் அவர் இதைவிடப் பெரிதாகக் கேட்ட காரணத்துக்காகக் இன்னமும் கஷ்டமேதான் கொடுப்பார்; நாங்களும் அந்தக்காலத்திலே கேட்டோம்" என்கிறது வீட்டுமூலையிலே முடங்கிக்கிடக்கும் முந்திய தலைமுறை. ஒரு மழைநாளின்பின்னால், கசகசப்பினைப் பொறுக்காமல் (கக்கத்திலே துண்டை வைத்துக்கொண்டு) கேட்டுவிடுகிறான். ஆண்டை சுருட்டை வாய்க்குள்ளே 'பப் பப்' என்று புகைபோக்கிச் சுழற்றிக்கொண்டு, " வீடெல்லாம் தரவேண்டிய அளவுக்கும் மேலாகத்தான் கட்டித் தந்திருக்கின்றேன். வேண்டுமானால், உள்ளது சிறக்க வேறேதும் வழி ஊர்த்துறவியிடம் போய் ஆலோசனைகேள்" என்று வாய்க்காலைத் திருப்பிவிடுகிறார். ஊருக்கெல்லாம் அறிவுரை சொல்லி ஓசியிலே தின்னும் துறவி (நல்ல பக்கவாத்திய வில்லன்) சொல்கிறார், "போய் பசுமாடுகள் நான்கையும் வீட்டுக்குள்ளே இழுத்துக் கட்டிக் கூட நாலு நாள் நித்திரை கொண்டுவந்துவிட்டுச் சொல்." விவசாயிக்குக் குழப்பம்; 'நும் ஏரணத்திலே எங்கோ தவறு' என்பதுபோல ஏறெடுத்துப்பார்க்கிறான்; துறவி சிரிக்கிறார் (மந்தஹாஸிக்கிறார் என்பதாக இங்கே போட்டுக்கொள்ளலாம்); கொல்லாமை கொடுமை மறுத்து நினைத்தமாத்திரத்திலே அசோகச்சக்கம் உள்ளங்கையிலும் உள்ளத்துச்சொல்லிலும் காட்டக்கூடியவரென்று விளம்பரம் கொண்ட துறவி நல்லமனிதர், ஆண்டைக்கும் அடிமைக்கும் முள்ளுச் சரியாத நடுநிலையாளன்.

இதுவொன்றும் பெரிய பயங்கரவாதச்சட்டமில்லையென்று விவசாயி வந்து பசுக்களை இழுத்து உள்ளே கட்டுகிறான்; முதியதலைமுறை பாதி திகைப்பு மீதி நகைப்பென்றிருக்கின்றது; மனைவி பைத்தியமே என்பதுபோலப் பார்த்து முறைக்கின்றாள்; வளர்ந்த பிள்ளைகள் கண்டனக்குரலெழுப்புகிறன; சிறியவை வீரிட்டுக்கத்துகிறன; பசுக்கள் எதிர்க்குரலெடுத்துக் கத்துகிறன; இரவு கோமயம், கோசலம்,கோமணமாக வீடு நிறைகிறது; உள்ள தூக்கமும் கெட்டுப் போகிறது; குழந்தைகளுக்கு நோய்; மனைவிக்கும் கணவனுக்குமிடையே சண்டை; பெரிசுகளிலே ஒன்றின் காலிலே பசு உழக்கி முறிவு. என்றாலும், ஊருக்கு நல்லது சொல்லும் துறவி எனக்கும் நல்லதுதான் சொல்லியிருப்பாரென்ற பிடிவாதத்திலே நான்கு நாட்களைக் கடத்திவிடுகிறவன், ஐந்தாம் நாள் அரற்றிக்கொண்டோடிப்போய், இன்னோரடுக்குத் துயரையும் சேர்த்துத் துறவிக்குச் சொல்கிறான்; ஆண்டை கொண்டு வந்த பழத்தை உரித்துக் கொடுக்கத் தின்று கொண்டிருப்பவர், மகிழ்ச்சிகொள்முகம் மாறாது, "காளைகளையும் கொண்டு வந்து உள்ளே கட்டு; நல்ல வலிதான தாம்புக்கயிறு வேண்டுமானால், ஆச்சிரமத்திலேயிருந்து தந்துதவுகிறேன்" என்கிறார்; குழம்பினாலும் சங்குசக்கரக்கைத்துறவிதான் எல்லோருக்கும் நல்லவராச்சே; "நன்றி" என்று கயிற்றை வாங்கிக்கொள்கிறான்; "ஊருக்கும் உபத்திரவப்பட்டாருக்கும் உதவத்தானே நானிருக்கிறேன்" என்று அடுத்த பழத்துக்குச் சாமி நழுவுகிறார். வீட்டுக்குள்ளே துயரமும் காளையேறிய சட்டிமுட்டிகளின் உடைபாடும் இன்னும் பெருகுகின்றன; திருப்பித் துறவியிடம் போவது கோழிக்குடும்பம் குடிசைக்குள்ளே வந்து முடிகிறது; வண்டில் ஈறாக வீட்டுக்குள்ளே வந்து சேர்ந்த பின்னாலே, துயரம் கேட்கிற துறவி சொல்கிறார், "வளர்ந்த பிள்ளைகளைத் தொழுவத்திலே விடு." திகைத்துப்போனாலும், துறவி ஊருக்கு நல்லவர்; விவசாயி எவ்வளவு அடித்தாலும் தாங்கும் நல்லவன். இருவர் வெளியே போவதொன்றும் இடப்பிரச்சனையைத் தீர்க்கவில்லை; ஆனால், குடும்பத்துள்ளே பெரும்பிரச்சனையைக் கொண்டு வந்துவிடுகின்றது; ஒரு சிறுகுழந்தை அம்மை கண்டு மாண்டு போகிறது; தொழுவத்திலே மூத்த மகனுக்குக் கால் முறிந்து போகிறது. இத்தோடு ஆண்டை நினைத்துக் கூப்பிடும் நேரமெல்லாம் தோட்டவேலை வேறு. காளைகள் போக்கிடப் புல்லின்றி நோஞ்சானாகின்றன. பசுமடி வற்றிப் போகிறது; மிதியுண்டு செத்த கோழிக்குஞ்சுகள் எண்ணிக்கை தெரியவில்லை.

கடைசியிலே ஆறுமாதங்களின் பின்னாலே துறவியை நம்பின ஏரணம் பிழைத்ததென்று போய் குரலெழுப்பி முறையிடுகிற விவசாயிக்கும் கூடப்போன மனைவிக்கும் ஆண்டை சகிதமாகத் தரிசனம் கொடுத்துக்கொண்டிருக்கும் சாமி சொல்கிறார், "இனிமேல் கோழிகள் தவிர்ந்த இரண்டு கால்ஜீவிகள்மட்டும் குடிசைக்குள்ளே வாழுங்கள்." "உங்களிடம் வழிகேட்டு வரமுன்னாலே அப்படித்தானே இருந்தோம் - ஒரு குழந்தை அதிகமாக உயிரோடிருந்தாலுங்கூட" எனுமாபோல ஏமாற்றத்திலும் இயலாமையிலும் குரல் கேவுகிறது; "ஸ்வாமி அனுக்கிரஹத்திலே வித்தியாசத்தை உணர்வாய்" என்கிறார் மந்தஹாஸஞானி. தலையைத் தொங்கப்போட்டுக் குழப்பத்தோடு திரும்புகின்ற தம்பதிகளிடம் ஆண்டை, 'இன்னமும் பெரியமனதுடன் குடிசையை இன்னமும் உனக்குத் தந்திருக்கின்றேன்; இதற்காகவே இனி எனக்கு வாடகை தரவேண்டும்' என்பது போலச் சொல்கிறார். இச்சந்தர்ப்ப இடுக்குள்ளே இத்தனைநாள் இலவச ஆலோசனை சொன்னதற்கு ஆச்சிரமத்துக்குத் தட்சணை வைத்துப் போகத் தர்மச்சக்கரம் சுழற்றிக்காட்டிச் சொல்கிறார் துறவி. பசுக்களையும் காளைகளையும் விற்று ஆச்சிரமத்தட்சணையும் தன்னிலத்தொழுவத்தை ஆண்டைக்கும் கொடுத்துவிடுகிறான்; குடிசையின் பௌதீகநிலை முன்னைவிட மோசம்; ஆண்டை துறவிக்கு ஒரு சின்னத்துளசிமாடம் தொழுவத்தை இடித்துக்கட்டித்தருவதாகச் சொல்கிறார். வீட்டுக்குள்ளே போய்ச் சரிகின்றவனுக்கு உள்வீடு இடம் திறந்து வெளியிலும் வழிவதாகத் தோன்றுகின்றது. சாமியார் பழம் தின்று கொண்டு முண்டிலே சாய்ந்திருந்தபடி ஆண்டை சகிதம் சொன்னது சரிதான். இனிமேலே சாமியாரிடம் வழி கேட்டுத் தூரம் அதிகம் போகவே தேவையில்லை; அவர்தான் ஓட்டைக்குடிசைவாசலிலேயே பூசைமாடம் கட்டி அருள் தர நாளுக்கு நான்குதடவை வந்து போகிறாரே!

இக்கதை கேட்டுப்புளித்துப் பழையதானதென்பதாலே இனிமேல், பிரபாகரனின் தாயார் கடிதம் எழுதிக்கேட்டால், மத்திய அரசிடம் கேட்டு வைத்தியத்துக்காகத் தமிழ்நாட்டுக்குவர அனுமதி பெற்றுத்தரப் பெரியமனதுவைத்து முயற்சித்த பெருங்காதையையும் பயங்கரவாதச்சட்டத்தின்பின்னாலே நெடுங்காலச்சிறைவாசம் வழங்கப்பட்ட பத்திரிகையாளர் திஸநாயகத்தை உலகப்பத்திரிகைச்சுதந்திரநாளன்று விடுதலைவழங்கி மன்னித்த காப்பியத்தையும் நாம் இடம்பெயர்த்து வருங்காலச்சந்ததிக்கு நீதி சொல்லிப் பழக்கலாமெனப்படுகின்றது.

இதைப்போன்ற இன்னொரு கதையுமிருக்கின்றது; வேறொரு சந்தர்ப்பத்துக்குச் சேமித்துக்கொள்ளலாம்.

2 comments:

-/சுடலை மாடன்/- said...

இந்தக் கதையைக் கூட மீளாய்வு, பின்னவீனத்துவப் புரிதல் என்று பிரித்து மேய்வார்கள், பின்னால் புலிகள்தான் எல்லாத்துக்கும் காரணமென்று முடித்து விடுவார்கள்.

சித்தார்த்த 'சே' குவேரா said...

again the end of my favorite poem (Cavafy's Waiting for the Barbarians) for you ;-)
-------------------------------------------------------

And now what shall become of us without any barbarians?
Those people were some kind of solution.