செல்வா கனகநாயகம் & எஸ் பொன்னுத்துரை

Monday, January 12, 2015



ஈழ/புலம்பெயர்த்தமிழ்ப்படைப்புலகம் சார்ந்து செயற்பட்ட இருவரை – செல்வா கனகநாயகம், எஸ்பொ- இருநாள் இடைவெளியிலே இவ்வாண்டிறுதியிலே இழந்திருக்கின்றது. இதுபோலவே, 2006இன் இறுதியிலே இருமாத, குறுகிய இடைவெளியிலே ஏ. ஜே. கனகரத்னாவினையும் வில்வரத்தினத்தையும் வரதரையும் இழந்தது ஞாபகத்துக்கு வருகின்றது.
 
வாசனைக்கு அப்பால், கனகநாயகத்தையோ எஸ்பொ இனையோ பழகியறியேன். செல்வா கனகநாயகமும் எஸ்பொவும் இயங்கிய தளம், வட்டம், முதன்மைமொழி, நோக்கு என்பவை வேறானவை. 

செல்வா கனகநாயகம் கல்விப்புலமைசார் வட்டத்திலே தமிழ்-ஆங்கிலம் ஊடாடிய பாலமாகவும் தன் பல்கலைத்துறையினை அதற்கான சந்தியாகவும் கொண்டிருந்தார். அவ்வகையிலே, பல்கலைக்கழகத்திலே  தன்தொழில்சார்ந்து அவர் நூல்களை வெளியிட்டிருந்தாலுங்கூட, ஈழ/புலம்பெயர் இலங்கைத்தமிழ்ச்சமூகத்தின் தமிழ்க்குரல்களை ஆங்கிலத்திலே பரந்த வாசகவளையத்துள்ளே கொண்டு சென்றதிலே அவருக்குப் பெரும்பங்குண்டு. அதற்கான ஒரு வெற்றிடம் இப்போது திடீரென விழுந்திருக்கின்றது. தமிழக இலக்கியப்புரவிகளின் கொசுவாலை, புரவலர்களின் மோவாய், தாடையை அங்கீகாரத்துக்காக எதிர்பார்க்கும் ஈழ/புலம்பெயர் இலங்கைத்தமிழ்க்கிறுக்கர்களின் ஞமலித்தனத்திற்கு மாற்றாக அப்புறமிருந்தும் இப்புறம் அங்கீகாரம் தேடும் வகையிலே விருதுகளை அமைத்த சிறப்பிலே அவருக்கும் பங்கிருக்கின்றது. அவரின் இரஜீவ விஜயசிங்ஹவுடனான சமரசத்துக்கு உள்ளாக்கிக்கொண்ட “கவிதைத்தொகுப்பு” மனிதமளவிலே 2009 இன் பின்னாலே எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாத தவறான செயற்பாடு. ஆனால், அவர் தமிழ்-ஆங்கில மொழிபெயர்ப்பு, மொழிபரப்பு வட்டங்களிலே விட்டுச்சென்றிருக்கும் கோதுகள் நிரம்பச் சில நாட்களேனும் ஆகும். புலம்பெயர்ந்த நாடுகளின் பல்கலைக்கழகவட்டத்திலே இப்போதும் மொழி, சமூகம் சார் துறையிலே இயங்கும் தமிழ் இவ்விடத்திலிருந்து தொடர்ச்சியாகப் புலமைசார் முனைப்பிலே தமிழ்ப்படைப்புலகம், சமூகம் சாரச் செயற்பட வேண்டிய தேவை இன்னமும் அதிகமாகின்றது.

எஸ்பொ, நான் வாசித்த அகவையின் நிலையிலே கிளுகிளுப்புக்குரியதென அந்நேர “சாருநிவேதிதா” என அவரை எண்ணிக்கொள்ள வைத்த “தீ” ஊடாக அறிமுகமானவர்; “சடங்கு” போன்றவை பின்னாலே அறிமுகமானவை. மிகவும் உயிர்ப்பான படிமங்களைக் கொளுந்துவிடவைத்த மொழி அவரது; மு. தளையசிங்கத்தின் “ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி” இலே சொல்லப்படும் எஸ்பொ ஒரு தனியன் என்றே எனக்குப் பட்டது; இலங்கையிலே பிறந்த தமிழ்ப்படைப்பாளிகளிலே கட்சி, போக்கு ஒட்டாத தனியர்கள் இருவர்; எஸ்பொ & பிரமிள். அத்தனித்துவம் எப்போதும் அவர்களின் குறைக்கப்பாலும் அவர்கள்மீது ஈர்க்கச்செய்கின்றது. தன்னோடு நாவலர் பற்றி 1990 களின் பின்னரையிலே “நாங்கள்தானே சும்மா வந்த ஆறுமுகத்துக்கு நாவலர் கொடுத்தனுப்பினோம்” என்று சொன்ன தமிழக “இந்தியன் யான்” ஆண்டையிடமே சென்றாண்டு உலகத்தமிழ் இலக்கியத்தின் பேரிலே சென்று வாழ்த்துக் கொண்ட எஸ்பொ, “சீ!” என்று தலை குப்புற உள்ளே விழுந்தாலும், அவரின் படைப்புகளின் காத்திரம் இன்னமும் மறுக்கவியலாதது; இன்றைய ஜெயக்காந்தனுக்காக, “சில நேரங்களிலே சில மனிதர்கள்” ஜெயக்காந்தனை மறுதலிக்கமுடியுமா? இத்தனை இழப்புகளைச் செய்த ஶ்ரீலங்கா அரசுவிருதுக்காகக் கொழும்பிலே போய் நின்ற முபொவை, பேரிழப்பின் இரத்தமும் நிணமும் காயமுன்னரே கருணாநிதியின் உலகத்தமிழ்மகாநாட்டிலே சும்மோ மல்யுத்தக்காரராகப் போய்நின்ற சிவத்தம்பியை நிராகரிக்கத்தான் முடியுமா? அவர்களின் பங்களிப்புகளை மறுக்கத்தான் ஆகுமா? சண்முகம் சிவலிங்கம் போலவே, தன் ஒரு மகனைப் போராட்டத்துக்காகப் பலி கொடுத்து “மித்ர” நிகழ்த்திய எஸ்பொவும் மாவீர்ரர் வாரத்திலே தன் மூச்சினை நிறுத்திக்கொண்டிருக்கின்றார். ஈழப்படைப்புலகுக்குத் தன்முகம் தந்த ஆரம்ப வித்துகளிலே ஒருவரான அவரின் இழப்பு ஈடுசெய்யமுடியாதது.  

(அடிப்படைப்படம்: நன்றி - தமிழிலக்கியத்தேட்டம்)      

0 comments: