பேச்சறு

Thursday, December 30, 2010

இரைச்சலுடன் மோதிக்கொல்லும் சொற்களிடையே

என் கைப்பத்திரத்தை நசுங்காமல் நகர்த்திடக்கூடும்

எந்நாளும் சுகந்தம்.



ஊனற்சவங்களில் எழும் கவிதைகளிலே பூப்பிடுங்காது

நகரும் என் காலம் வசந்தம்.



உக்கும் உடல்கள் உயிர்வாயுவை மட்டுமே கேட்கிறன

கவிதை என்ற பெயராட்டும் உன் எழுத்துச்சரையை

நுனி முறித்துச் சிதையெரி.



பேசாதிருக்கும் பொழுதெல்லாம் நிறையப் பேசினேன்;

கேட்காதார் சபைகூடிச் சத்தமின்றிக் கேட்டார்கள்.



தொடர்பற்ற நெளிசிந்தனைகள்

குடைந்து தொடர்கின்றனவா?

குரைத்துத் துரத்துகின்றனவா?



ஓடிக்கொண்டிருக்கின்றவனுக்கு

உள்ளதெல்லாம்

உயிர்வாழ்வுக்கல்லா

உப்பிலிக்கேள்வி

வீழ்ச்சி

Wednesday, November 3, 2010



2010 ஒக்ரோபர்
வில்பர்போஸ், ஒஹாயோ, அகூநா

தளைப்பட்டால் தலைவன் தாழ்வே

Thursday, May 20, 2010

"Robespierre was guillotined without trial in the Place de la Révolution. His brother Augustin, Couthon, Saint-Just, Hanriot and twelve other followers, among them the cobbler Simon, were also executed. Only Robespierre was guillotined face-up. When clearing Robespierre's neck the executioner tore off the bandage that was holding his shattered jaw in place, producing an agonising scream until the fall of the blade silenced him."
- Wikipedia on Maximilien Robespierre.

வேலைசெய்யுமிடத்திலே தலைமைத்துவம் பற்றிப் பேச்சு வந்தது; அப்பொருளிலே ஆய்வாளர் ஒருவர் தலைவர்களின் வகைப்பாட்டினைப் பட்டியலிட்டார்; "மக்களை வழிநடத்தும் தலைவன்; மக்களால் வழிநடத்தப்படும் தலைவன்; மக்களைத் தன் வழிநடக்க ஆணையிடும் தலைவன்; இலட்சியங்களைக் குறிபார்த்து நடக்கும் தலைவன்; நடப்புக்கேற்பத் தான் வழிநடத்துகின்றவர்களின் இருப்பினைத் தக்கவைக்கும் தலைவன்...." தொடர்ந்து என்ன சொன்னார் என்பதிலே கவனம் சிதறிவிட்டது; ஆராய்ச்சிக்கு இதுவெல்லாம் தேவையாகவிருக்கக்கூடும், ஆனால், நடைமுறைக்கு மிக எளிதான ஒரு கூறிடலே தலைமைத்துவத்தை வரையறுக்கப்போதுமென்று தோன்றியது:

தலைவன் (தலைவி) & தலைவர்.

தலைவர் என்ற சொல்லை, சாதாரணமாக, சுரணையிலாமலே முன்பக்கப்பத்திரிகைச்செய்திகளிலும் முக்கியவானொலிச்செய்திகளிலும் எழுவாயாக உள்வாங்கினேன் - எறும்பூர்வது போன்ற உணர்வுகூட இல்லாமல்; கூட்டுறவுச்சங்கத்தலைவர், சுதந்திரப்போராட்டத்தலைவர், கூட்டணித்தலைவர். ஒரு சம்பிரதாயத்துக்காக, உத்தியோகபூர்வ மரியாதையை வேண்டி அந்நியமாக எட்டிநிற்கின்ற சொல், தலைவர். "நிர்வாணமாக ஊர்வலம் போகின்றபோதும், பட்டாடையோடு பவனி வருகின்றார்" என்று பரணி பாடக் கேட்கின்றவர், 'தலைவர்'.

ஆனால், தலைவன் என்பது வேறான தொனியிலும் தோரணையிலும் வருவது. எம்ஜிஆரின் படத்தலைப்பாகவோ, கல்கியின் சிவகாமியின் சபதத்திலோ பார்த்திபன் கனவிலோ சிவகாமி ஆடும் நாவுக்கரசர் பாடலாகவோ அறிமுகமாகி, சங்கப்பாடல்களின் விளக்கவுரைகளிலே என்னுள்ளே விரிந்தவன், தலைவன். சம்பிரதாயத்தை விலக்கியும் கூம்புப்படிநிலை மறுத்தும் அணுக்கத்தன்மையோடு தொட்டு ஒட்டி நெருங்கிச் செல்லும் பதம், 'தலைவன்'; குழுமத்துக்குப் பாட்டுடைத்தலைவனாகவிருந்தாலுங்கூடப் பின் தொடர்கின்றவரை கண்ணப்பநாயனார், எறிபத்தநாயனார் போன்ற முரட்டுத்தொண்டர்களாக அன்பின் நெருக்கத்திலே இயங்கச்செய்பவன்; தம்மோடு பொருந்தாதென்கிறபோது, "தலைவா, உன் தலைக்கு இந்த சிலுப்பா டோப்பா பொருந்தவில்லையே! அடுத்த படத்திலே மாற்று" என்று கலரி_கதிரையிலிருந்து சீழ்க்கையை மறுத்துக்கூவச்செய்வபன் தலைவன்.

"மக்களாலே வழிநடத்தப்படும் தலைவன்தான் மக்களை வழிநடத்தும் தலைவனாக இருக்கிறான்" என்கிறேன்; ஆய்வாளநண்பர், "இல்லை, இரண்டும் வேறுவேறு; மோசஸ் மக்களை வழிநடத்திய தலைவன்; உரோபேஸ்பியர் மக்களால் வழிநடத்தப்பட்ட தலைவன்" என்கிறார். "அடப்பாவிகளே மக்களால் வழிநடத்தப்பட்டவன் என்ற புரட்சிக்காரனை அவன் பயன்படுத்திய கில்லட்டினுக்கே அனுப்பிவிட்டு, மக்களை மந்தைகளாக வைத்துப் பார்த்துத் தன் செய்கைகளுக்குக் காரணம் சொல்லவேண்டுமென்ற அடிப்படைத்தார்மீகமுமில்லாற் கூட்டிச்சென்றவனைக் கும்பிடும் சமூகமடா நீங்களெல்லாம்!" என்று வழக்கம்போலக் குதர்க்கமாக நாக்கிலே சரசுசதி எம்பினாள்; அமுக்கிவிட்டேன். "ஆமி அடம்பனுக்குள்ளை உடைச்சுக்கொண்டு வெளிக்கிட்டான்" என்று தொடங்கும் வார இறுதிகளின் ஒன்றுகூடலின் பேச்சுகளை, "தலைவர் அதுக்கு ஒரு பிளான் வைச்சிருப்பார்" என்ற ஒருவரி நெம்புகோலோடு தலைவர் முதுகிலே சுமையை நகர்த்திவிடும் மக்கள்தான் கேள்வியையே கேட்கவில்லையே, கேட்கவிரும்பவில்லையே, பிறகு மோசஸைப் பார்த்து இம்மக்களை மந்தையாக நடத்தினாயேயென்று குறைசொல்லி என்ன பயன்! ஒரு மக்கள்புரட்சியையே முன்னின்று நடாத்தி அரசன் பதினாலாம் உலூயியினையும் ஒஸ்ரியாவிலிருந்து வந்தேறு அரசி மரியேட் அந்தோனியேட்டினையும் ஊதாரி அரசினையும் கவிழ்த்த உரோபேஸ்பியரை எல்லோரிலும் சந்தேகம் கொள்ளவைத்துக் கடைசியிலே அதே கில்லட்டினுக்கு அனுப்பியதிலே அவன் கவிழ்த்த அரசுக்கு எத்துணை சம்பந்தமிருக்கிறதென்று வரலாறு தெளிவாகப் பேசவில்லை; ஆனால், தலைவன் உரோபேஸ்பியரை, தலைவர் உரோபேஸ்பியர் எல்லாவற்றையும் செய்வாரென்று விட்டுவிட்டு, தத்தமது வேலையைப் பார்க்கப்போன மக்களுக்குப் பெரிய பங்கிருக்கின்றது எனச் சொல்லலாம்.

உரோபேஸ்பியர் ஒரு சிறந்த தலைவன்; ஆனாலும், அவனும் தனிமனிதன்; அவனின் வல்லமைக்கும் எல்லையுண்டு; புறக்காரணிகளும் கைவசப்படாத்தருணங்களும் அவனை மீறியவை; ஆட்சிக்கட்டிலே தலைவராக மாற்றி ஏற்றிவிட்டு எல்லாவற்றையும் அவரே செய்வாரென்று தன் நாளாந்த காய் உரொட்டிக்காயும் குவளைக்குடிநீருக்காகவும் நகர்ந்த ஒரு பெருங்கும்பலுண்டு. இதைத் தவறென்று சொல்லமுடியவில்லை; எந்நேரமும் கத்திக்கூர்மையாக இருக்காத புரட்சியிலே மக்கள் தனிமனிதத்தீவாகவே சொந்தத்தேடுதலிலே சுழலமுடியும்; இயல்பு இதுதான். ஆயினும், இதன் விலையாக, இறுதியில் வரப்போகும் உலகத்தின் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையையும் ஏதோவிதத்திலே மேம்பட உதவிய முன்னோடிப்புரட்சியைச் செய்தவன் வரலாற்றிலே அவனின் சுருக்கமான இறுதிக்காலகட்டத்துக்காக வன்மையாகவே வரையப்பட்டுப் போகிறான். இரு பெரும் நகரங்களிலே அணுக்குண்டுகளைப் போட்டுக் கொல்ல அனுமதி கொடுத்த ஆட்சித்தலைவரும் "ஆலமரம் வீழ்ந்தால் நாணற்புற்கள் நசியுண்டு சாகத்தான் செய்யும்" என்று தோளை ஒரு முறை குலுக்கிவிட்டுப்போன ஆட்சித்தலைவரையும் மக்கள்புரட்சியின்பேரிலே பனிக்காட்டுவதைமுகாம்களுக்கு அனுப்பிக்கொன்ற ஆட்சித்தலைவரையும்விடவா, வரலாறு உரோபேஸ்பியரை மோசமாக எழுதவேண்டும்! வரலாறு என்பது எழுதுகின்றவரின் பார்வையைப் பொறுத்ததாலே விட்டுவிடலாம்.

ஆனாலும், இதுவொன்றும் உரோபோஸ்பியர் எக்குற்றத்தினையும் தவறினையும் இழைக்கவில்லையென்பதாகச் சொல்வதாகாது. அத்தலைவனிடம் "மக்கள் நலம் மக்கள் நலம் என்று சொல்லுவார்; தம்மக்கள் நலம் ஒன்றேதான் மனதிற் கொள்ளுவார்" என்றிருக்காததுட்பட எத்தனையோ தலைவர்களிலே இருக்காத புல்லமை தவிர்த்த பெருங்குணங்களிருந்தன. ஆனால், மக்கள்தலைவனிலிருந்து தேசியத்தலைவராகத் தள்ளிவிட்டு விளையாட்டுப் பார்க்கும் விபரீதத்தைப் புரிந்துகொள்ளாமல், அந்த 'தலைவன் | தலைவர்' இலட்சுமணக்கோட்டைக் கடந்த பேதமையும் கிடந்தது. அக்கத்திக்கோட்டினை உணர்ந்து கொள்ளும் தன்மையிருந்திருப்பின், தலைவர் என்று ஏற்றிவிட்டதின் பெயரிலே நிகழ்ந்த மக்களுக்கெதிரான ஒவ்வொரு கொடூரத்தினையும் தானே தான் செய்ததாகச் சுமந்துபோகவேண்டிய அவலம் ஏற்பட்டிருக்காது.

ஆனால், நெடுங்காலநோக்கிலே ஒருவன் தலைவனாயிருந்தானா அல்லது தலைவராகத்தானிருந்தானா என்று நிறுவுவது, அவனின் இருப்பல்ல, இறப்புத்தான் என்றுதான் சொல்லத்தோன்றுகின்றது. "அடுத்து என்ன செய்யப்போகின்றோம்" என்று தெரியாத குழப்பத்திலும் கேள்வியிலும் காலச்சுவரிலே ஆணியடித்துத் தொங்க மக்கள் நிற்கும்போது, ஓயாது பல்முளைத்து நன்னும் ஒவ்வொரு சுண்டெலியும் தலைமை நானென்று செய்கைப்பட்டியலாலே ஆசனத்தைக் கோரும் நிலையிலேதான், 'இதை நான் செய்தேன்' என்று சொல்லிக்காட்டாமலே மக்களை வழிநடத்தின, மக்களால் வழிநடத்தப்பட்ட அவன் தலைவனென நிறுவப்படுவது முழுமையடைகின்றது. தனக்கெனத் தன் ஆட்சியின் பின்னாலே வர ஒருவனைப் பழக்கப்படுத்தி வைக்காதுபோகின்றவனை எப்படி தலைவன் எனலாம் என்ற கேள்வி எழுப்புகின்றவர்கள் உள்ளனர்; கட்சியை வழிப்படுத்த வாரிசினைத் தலையணையும் மெத்தையும் கவசமும் கட்டி வளையத்துக்குள்ளேவிட்டுப் பழக்கப்படுத்துதல்கூட ஜனநாயகமற்றது; இந்நிலையிலே, மக்களை வழிநடத்த வாரிசையோ வாரிசுகளையோ வரிசைப்படுத்துப் போவது, வேண்டுமானால், அரசியலிலே ஒரு தலைவருக்கு அத்தியாவசியமானதாகலாம் - கௌரவப்பட்டங்கள், பெருவிழாக்கள்போல; ஆனால், ஒரு முறையான தலைவன் எந்நிலையிலும் மக்களையே தமக்குப் பொருந்தின அடுத்த தலைவனைத் தேர்ந்தெடுத்து வழிகாட்ட வழிநடத்தமுடியுமென்று விட்டுச்செல்வான்; இப்படியாக, 'இல்லா வெறுமை' உணரப்பட்டு, மக்களே தமக்கான அடுத்த தலைவனுக்கு வழிகாட்டி வழிநடத்தப்படும் நிலையிலேயே தலைவன் உருவாகுகிறான். அவன், களியைப் பிசைந்து வனைந்து மெருகிட உருவாகுகிறவன். தலைவனின் எல்லை இலட்சுமணக்கோட்டைத் தாண்டிக் கெடுகின்றவர் தலைவர். சரிகின்றபோது, தலைவன், மக்கள் உள்ளேயிருந்து ஒன்றைத் தன்னோடு பிய்த்துக்கொண்டே சரிகின்றான்; தலைவர், ஆட்சிப்பீடத்தைப் பிரித்துக்கொள்ளவும் பிய்த்துக்கொள்ளவும் பிள்ளைகளையோ பேய்களையோ விட்டுப்போகிறார்.

இத்தனையும் சொன்னபின்னால், உரோபேஸ்பியர் கில்லட்டிலினிலே போனபோது, 'தலைவனாகப் போனானா? தலைவராகப் போனாரா?' என்று கேட்டால், சொல்லக்கூடியது ஒரே பதில், 'அது கேட்பவருக்கு உரோபேஸ்பியர் என்ற தனிமனிதனைப் பற்றி இருக்கும் தனிப்பட்ட கருத்தினைப் பொறுத்தாகின்றது'.

இப்படியான சிதறின கருத்தோட்டங்களையெல்லாம் முறைப்படி கற்று ஆயும் நண்பருக்குச் சொல்லமுடியவில்லை; தமிழிலிருந்து இற்றைநாள் ஆங்கிலத்துக்கான மொழிபெயர்ப்பிலே உதிர்ந்துபோவது, தலைவனுக்கும் தலைவருக்குமான வேறுபாடு. மேலும், கொட்டிக்கிடக்கும் செய்திகளிலிருந்து இரைச்சல் களைந்து அடிப்படையிலே எளிதான விடயங்களைப் பிரித்தெடுத்துச் சொல்வதுதான் கடினமானகாரியம்.


For some he was the 'The Incorruptible', and
for the others, there was a 'dictateur sanguinaire'.....
but none can deny there reigned an indisputable unique leader
who would force the future historians quote our '
Anno Domini'.


அடிப்படைப்படம் நன்றி:
http://en.wikipedia.org/wiki/File:Robespierre.jpg

அதன் பேரில் அழிந்த இழந்த அத்தனை பேருக்குமாக....

Tuesday, May 18, 2010








மீள்தன்மைமட்டு

கதை ஒன்று; அநேகருக்குத் தெரிந்த பழைய கதைதான்; ஆனால், சந்தர்ப்பத்துக்குத் தேவைப்படுவதாலே ஆங்காங்கே சின்னச் சீர்திருத்தம், பாத்திரமாற்றம் செய்து திரும்பச் சொல்வதினாலேதும் குறையப்போவதில்லை.

கதை இது; விவசாயி ஒருத்தன்; மனைவி + ஆறு குழந்தைகள் + அவன் பெற்றோர் + மனைவியின் பெற்றோர்; இத்தனை பேரும் வசிப்பது ஒரு குடிசை. வெளியிலே தொழுவத்தில் நான்கு பசுக்கள், இரண்டு காளைகள், கன்றுகள் சில; அருகே கூட்டுக்குள் கோழிகள், சேவல்கள் & குஞ்சுகள். மேலதிகமாக நாய் இரண்டு & நினைத்தால் வந்துபோகும் பூனைக்குடும்பம் (குடும்பக்கணக்கிலே போட்டுக்கொள்ளலாம்). வண்டில் ஒன்று. பன்னிரண்டு பேர் அமுங்கிக்கொள்வது கஷ்டமென்றும் ஆண்டைப்பண்ணையாரிடம் ('பார்முலா வில்லன்' பாத்திரம் வேண்டாமா?) குடிசையைக் கொஞ்சம் பெரிதுபடுத்தித்தரவேண்டுமென்று கேட்கப்போவதாகவும் விவசாயி சொல்கிறான். "கேட்டால் அவர் இதைவிடப் பெரிதாகக் கேட்ட காரணத்துக்காகக் இன்னமும் கஷ்டமேதான் கொடுப்பார்; நாங்களும் அந்தக்காலத்திலே கேட்டோம்" என்கிறது வீட்டுமூலையிலே முடங்கிக்கிடக்கும் முந்திய தலைமுறை. ஒரு மழைநாளின்பின்னால், கசகசப்பினைப் பொறுக்காமல் (கக்கத்திலே துண்டை வைத்துக்கொண்டு) கேட்டுவிடுகிறான். ஆண்டை சுருட்டை வாய்க்குள்ளே 'பப் பப்' என்று புகைபோக்கிச் சுழற்றிக்கொண்டு, " வீடெல்லாம் தரவேண்டிய அளவுக்கும் மேலாகத்தான் கட்டித் தந்திருக்கின்றேன். வேண்டுமானால், உள்ளது சிறக்க வேறேதும் வழி ஊர்த்துறவியிடம் போய் ஆலோசனைகேள்" என்று வாய்க்காலைத் திருப்பிவிடுகிறார். ஊருக்கெல்லாம் அறிவுரை சொல்லி ஓசியிலே தின்னும் துறவி (நல்ல பக்கவாத்திய வில்லன்) சொல்கிறார், "போய் பசுமாடுகள் நான்கையும் வீட்டுக்குள்ளே இழுத்துக் கட்டிக் கூட நாலு நாள் நித்திரை கொண்டுவந்துவிட்டுச் சொல்." விவசாயிக்குக் குழப்பம்; 'நும் ஏரணத்திலே எங்கோ தவறு' என்பதுபோல ஏறெடுத்துப்பார்க்கிறான்; துறவி சிரிக்கிறார் (மந்தஹாஸிக்கிறார் என்பதாக இங்கே போட்டுக்கொள்ளலாம்); கொல்லாமை கொடுமை மறுத்து நினைத்தமாத்திரத்திலே அசோகச்சக்கம் உள்ளங்கையிலும் உள்ளத்துச்சொல்லிலும் காட்டக்கூடியவரென்று விளம்பரம் கொண்ட துறவி நல்லமனிதர், ஆண்டைக்கும் அடிமைக்கும் முள்ளுச் சரியாத நடுநிலையாளன்.

இதுவொன்றும் பெரிய பயங்கரவாதச்சட்டமில்லையென்று விவசாயி வந்து பசுக்களை இழுத்து உள்ளே கட்டுகிறான்; முதியதலைமுறை பாதி திகைப்பு மீதி நகைப்பென்றிருக்கின்றது; மனைவி பைத்தியமே என்பதுபோலப் பார்த்து முறைக்கின்றாள்; வளர்ந்த பிள்ளைகள் கண்டனக்குரலெழுப்புகிறன; சிறியவை வீரிட்டுக்கத்துகிறன; பசுக்கள் எதிர்க்குரலெடுத்துக் கத்துகிறன; இரவு கோமயம், கோசலம்,கோமணமாக வீடு நிறைகிறது; உள்ள தூக்கமும் கெட்டுப் போகிறது; குழந்தைகளுக்கு நோய்; மனைவிக்கும் கணவனுக்குமிடையே சண்டை; பெரிசுகளிலே ஒன்றின் காலிலே பசு உழக்கி முறிவு. என்றாலும், ஊருக்கு நல்லது சொல்லும் துறவி எனக்கும் நல்லதுதான் சொல்லியிருப்பாரென்ற பிடிவாதத்திலே நான்கு நாட்களைக் கடத்திவிடுகிறவன், ஐந்தாம் நாள் அரற்றிக்கொண்டோடிப்போய், இன்னோரடுக்குத் துயரையும் சேர்த்துத் துறவிக்குச் சொல்கிறான்; ஆண்டை கொண்டு வந்த பழத்தை உரித்துக் கொடுக்கத் தின்று கொண்டிருப்பவர், மகிழ்ச்சிகொள்முகம் மாறாது, "காளைகளையும் கொண்டு வந்து உள்ளே கட்டு; நல்ல வலிதான தாம்புக்கயிறு வேண்டுமானால், ஆச்சிரமத்திலேயிருந்து தந்துதவுகிறேன்" என்கிறார்; குழம்பினாலும் சங்குசக்கரக்கைத்துறவிதான் எல்லோருக்கும் நல்லவராச்சே; "நன்றி" என்று கயிற்றை வாங்கிக்கொள்கிறான்; "ஊருக்கும் உபத்திரவப்பட்டாருக்கும் உதவத்தானே நானிருக்கிறேன்" என்று அடுத்த பழத்துக்குச் சாமி நழுவுகிறார். வீட்டுக்குள்ளே துயரமும் காளையேறிய சட்டிமுட்டிகளின் உடைபாடும் இன்னும் பெருகுகின்றன; திருப்பித் துறவியிடம் போவது கோழிக்குடும்பம் குடிசைக்குள்ளே வந்து முடிகிறது; வண்டில் ஈறாக வீட்டுக்குள்ளே வந்து சேர்ந்த பின்னாலே, துயரம் கேட்கிற துறவி சொல்கிறார், "வளர்ந்த பிள்ளைகளைத் தொழுவத்திலே விடு." திகைத்துப்போனாலும், துறவி ஊருக்கு நல்லவர்; விவசாயி எவ்வளவு அடித்தாலும் தாங்கும் நல்லவன். இருவர் வெளியே போவதொன்றும் இடப்பிரச்சனையைத் தீர்க்கவில்லை; ஆனால், குடும்பத்துள்ளே பெரும்பிரச்சனையைக் கொண்டு வந்துவிடுகின்றது; ஒரு சிறுகுழந்தை அம்மை கண்டு மாண்டு போகிறது; தொழுவத்திலே மூத்த மகனுக்குக் கால் முறிந்து போகிறது. இத்தோடு ஆண்டை நினைத்துக் கூப்பிடும் நேரமெல்லாம் தோட்டவேலை வேறு. காளைகள் போக்கிடப் புல்லின்றி நோஞ்சானாகின்றன. பசுமடி வற்றிப் போகிறது; மிதியுண்டு செத்த கோழிக்குஞ்சுகள் எண்ணிக்கை தெரியவில்லை.

கடைசியிலே ஆறுமாதங்களின் பின்னாலே துறவியை நம்பின ஏரணம் பிழைத்ததென்று போய் குரலெழுப்பி முறையிடுகிற விவசாயிக்கும் கூடப்போன மனைவிக்கும் ஆண்டை சகிதமாகத் தரிசனம் கொடுத்துக்கொண்டிருக்கும் சாமி சொல்கிறார், "இனிமேல் கோழிகள் தவிர்ந்த இரண்டு கால்ஜீவிகள்மட்டும் குடிசைக்குள்ளே வாழுங்கள்." "உங்களிடம் வழிகேட்டு வரமுன்னாலே அப்படித்தானே இருந்தோம் - ஒரு குழந்தை அதிகமாக உயிரோடிருந்தாலுங்கூட" எனுமாபோல ஏமாற்றத்திலும் இயலாமையிலும் குரல் கேவுகிறது; "ஸ்வாமி அனுக்கிரஹத்திலே வித்தியாசத்தை உணர்வாய்" என்கிறார் மந்தஹாஸஞானி. தலையைத் தொங்கப்போட்டுக் குழப்பத்தோடு திரும்புகின்ற தம்பதிகளிடம் ஆண்டை, 'இன்னமும் பெரியமனதுடன் குடிசையை இன்னமும் உனக்குத் தந்திருக்கின்றேன்; இதற்காகவே இனி எனக்கு வாடகை தரவேண்டும்' என்பது போலச் சொல்கிறார். இச்சந்தர்ப்ப இடுக்குள்ளே இத்தனைநாள் இலவச ஆலோசனை சொன்னதற்கு ஆச்சிரமத்துக்குத் தட்சணை வைத்துப் போகத் தர்மச்சக்கரம் சுழற்றிக்காட்டிச் சொல்கிறார் துறவி. பசுக்களையும் காளைகளையும் விற்று ஆச்சிரமத்தட்சணையும் தன்னிலத்தொழுவத்தை ஆண்டைக்கும் கொடுத்துவிடுகிறான்; குடிசையின் பௌதீகநிலை முன்னைவிட மோசம்; ஆண்டை துறவிக்கு ஒரு சின்னத்துளசிமாடம் தொழுவத்தை இடித்துக்கட்டித்தருவதாகச் சொல்கிறார். வீட்டுக்குள்ளே போய்ச் சரிகின்றவனுக்கு உள்வீடு இடம் திறந்து வெளியிலும் வழிவதாகத் தோன்றுகின்றது. சாமியார் பழம் தின்று கொண்டு முண்டிலே சாய்ந்திருந்தபடி ஆண்டை சகிதம் சொன்னது சரிதான். இனிமேலே சாமியாரிடம் வழி கேட்டுத் தூரம் அதிகம் போகவே தேவையில்லை; அவர்தான் ஓட்டைக்குடிசைவாசலிலேயே பூசைமாடம் கட்டி அருள் தர நாளுக்கு நான்குதடவை வந்து போகிறாரே!

இக்கதை கேட்டுப்புளித்துப் பழையதானதென்பதாலே இனிமேல், பிரபாகரனின் தாயார் கடிதம் எழுதிக்கேட்டால், மத்திய அரசிடம் கேட்டு வைத்தியத்துக்காகத் தமிழ்நாட்டுக்குவர அனுமதி பெற்றுத்தரப் பெரியமனதுவைத்து முயற்சித்த பெருங்காதையையும் பயங்கரவாதச்சட்டத்தின்பின்னாலே நெடுங்காலச்சிறைவாசம் வழங்கப்பட்ட பத்திரிகையாளர் திஸநாயகத்தை உலகப்பத்திரிகைச்சுதந்திரநாளன்று விடுதலைவழங்கி மன்னித்த காப்பியத்தையும் நாம் இடம்பெயர்த்து வருங்காலச்சந்ததிக்கு நீதி சொல்லிப் பழக்கலாமெனப்படுகின்றது.

இதைப்போன்ற இன்னொரு கதையுமிருக்கின்றது; வேறொரு சந்தர்ப்பத்துக்குச் சேமித்துக்கொள்ளலாம்.

அலைகளை

Monday, May 17, 2010



சுவரின் சுண்ணாம்புச்சிதிலத்தோடு மோதும்
ஒரு குருட்டுக்கடுவன் பூனையினது விடிகாலை.

சொடுக்கிச் செய்தி சூப்பிக் கக்கின சக்கையுட்
சொட்டின குருதியைக் குட்டிக்குச் சுட்டும்
பெருவிரல் தள்ளி ஊட்டும் அவம், நிகழ் படலம்.
கால் அவிழ்ந்தலையும் குட்டிக்கு,
பாலின் தவனம்; பருக்கையில் கவனம்.

சொந்த நிழலைக் கௌவிச் சீறலும் பிராண்டலும்.
சாம்பலாய்க் கழியும் முதுமயிரைக் கிளைந்து
சாளரக்கண்ணாடி விரியும் நாளழியா எச்சத்துவீரம் .

ஒரு கிழட்டுப்பூனையின் உலகம் புழுத்துப் போன
ஒரு பழைய சொற்புரட்சிக்காரனின் பாலைத்தறை.
எழுத்தும் கருத்தும் நெம்ப முடிவதெல்லாம்
வெடிக்கப் பூனையும் நெளிபுழு என்பதைத்தான்.

களமோ காகிதமோ அடி வெம்பிச் சூம்ப
புரட்சி பெயரலையும் மினுங்கு துகளெதுவும்
தவழும் குட்டிகளின் குறளும் விரல்களின்
பாற்றவனத்திலும் பருக்கைக்கவனத்திலும்
நுழைந்து ஒளிந்து கொள்ளும் காலவனமாகிறது.

போக்குகிறகாலத்தில்
அவரவர் புரட்சியை அவரவரும்,
போகிறகாலத்தில்
போசனபாசனத்தை போவார் வருவாரும்
தத்தெடுத்துக் கொள்கிறார்கள்.

சுற்றிச்சுட்டியோடும்
பெட்டித்தளத்துள்ளே
அளைந்து உதிர்முடி
அலைந்து கொண்டிருக்கும்
பூனைக்கால்கள்
எட்டு
உடைத்தது என் குச்சு;
பெரியன நான்கு;
பிஞ்சுகள் நான்கு.

மேலே பூனை நட
பின்னே நீ தொடர்.
கீழே குட்டி நகர்
பின்னே நான் தொடர.....

ஒரு சரிந்த தொப்பிக்காரன்
இன்னும் சாட்டுக்கேனும்
விரட்டிக்கொண்டிருக்கிறான்
என்னை,
ஒரு சாந்தமுனி
பின்னும் ஆட்கவிந்து
முடக்கிக்கொண்டிருப்பதைப்போலவே.

சுவரின் சுண்ணாம்புச்சிதிலத்தோடு மோதும்
ஒரு குருட்டுக்கடுவன் பூனையினது
காலையைப் போன்றவைதான்,
கழிக்கும் மதியமும்
கருங்கும் மாலையும்.

சித்தக்குறி சற்றுச்சிதறிய
எட்டுக்காற்பூச்சியின் வட்டக்கண்கள்
எத்திசைப்பட்டவை?

'07/04/28 சனி
மீள்பதிவு

புலம்பெயர்தமிழர்களின்மீதான கல்

கடந்த ஓராண்டாக வாசித்த ஈழம் தொடர்பான கட்டுரைகளும் எதிர்வினைகளும் விடுதலைப்புலிகளின் இராணுவத்தோல்விக்குப் பின்னாலான, ஈழத்தமிழர் & புலம்பெயர்தமிழர்களின் இருப்பினையும் எதிர்காலத்தினையும் மையப்படுத்திப் பல விவாதப்புள்ளிகளைத் தொடுகின்றன. கட்டுரைகளை வாசிக்கும்போது எழும் எண்ணங்களைத் தெளிவாகச் சொல்லமுடியாத உணர்வும், இதுவரை நாள் சொல்லி எதனைச் சாதித்தோமென்ற ஆயாசமுமே முடிவிலே எஞ்சும். இன்றும் இவ்விவாதப்புள்ளிகளிலே பலவற்றினைப் பேசுவதற்கான பொருத்தமான களமும் கணமும், மேலாக, எஞ்சியிருக்கும் குற்றம் களைந்த தெளிவும் தகுதியும் எனதாகி வரவில்லையென்றே சொல்வேன். ஆனால், புலம்பெயர்ந்த ஈழம் சார்பான தமிழர்கள் என்ன செய்யவேண்டுமென்பதிலே ஓரளவு தெளிவு புலம்பெயர்ந்தவனாக உண்டு.

இக்காலகட்டத்திலே புலம்பெயர்-ஈழத்தமிழர்களாலே எதையுமே பெரிதாகச் சாதிக்கமுடியாதென்ற தொனியிலே அகில நெருக்கடி (ஆய்)குழு (International Crisis Group) மாசி மாதத்திலே அறிக்கை வெளியிட்டிருந்தது. இதற்கான ஆய்வுகளைக் களத்திலும் புலத்திலும் எவ்விதமான அரசியற்பின்புலமுள்ளவர்கள் செய்தார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், இஃது ஓரளவுக்குச் சோர்வினை ஏற்படுத்தும்விதத்திலே ஒரு பக்கச்சார்பாகத் தொகுக்கப்பட்ட அறிக்கையாகத் தோன்றியது. இவ்வாரம் வெளியாகும் இக்குழுவின் "வன்னியிலே கடந்த ஆண்டு நடந்ததவை" மீதான அறிக்கை புலம்பெயர்-ஈழச்சார்பான தமிழர்கள் சோர்வின்றிப் புலம்பெயர் அரசியலிலே உழைக்கவேண்டியதற்கான காரணக்கூறுகளைக் காட்டுகிறது.

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கு வரைவிலக்கணம் கொடுப்பதென்பது தண்ணீருக்கு வரைவிலக்கணம் தருவதுபோல - எடுக்கிறவர் குடுவைக்கும் வெப்பத்துக்குமேற்ப வடிவமும் பண்புகளும் வரையறுக்கப்படுகின்றன. ஆளாளுக்கான அரசியலின் தேவைக்கேற்ப வசதிப்படும் இந்த வரையறுப்பு (அல்லது அப்படியொன்று அற்ற தன்மை) அண்மையிலே ஸ்ரீலங்கா அரசினாலே இரண்டு அதீதங்களிலே பயன்படுத்தப்படுவதைக் காணலாம். ஓர் அதீதப்புள்ளியிலே, விடுதலைப்புலிகளின் எச்சமாக, நாடுகடந்த அரசாங்கத்தை அமைக்க புலம்பெயர் ஈழத்தமிழர்கள் முயல்வதாகவும் அவர்கள் 'ஸ்ரீலங்கா'விலே வாழும் தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லையென்றும் அவர்களைப் பயங்கரவாதிகளென்று தடைசெய்யவேண்டுமென்றும் மேற்கின் அரசுகளிடம் ஸ்ரீலங்கா அரசு கேட்கிறது; மறு அதீதப்புள்ளியிலே கொழும்பிலிருந்து கொண்டு தனக்குச் சார்பான, தன் செய்கைகளை ஆதரிக்கும் srilankan tamil diaspora என்று (தான் திட்டமிட்டு அடையாளப்படுத்தும்) புலம்பெயர்தமிழர்களுடன் நாட்டைக் கட்டியெழுப்பப் பேசிவருகின்றோமென்று அறிக்கையை விடச் செய்கின்றது. இப்படியான பாயத்தன்மை கொண்ட வரைவிலக்கணத்தினை எப்படியாக ஈழத்திலே வாழ்கின்றவர்களுக்கு, கடந்தகால இழப்புகளை ஈடு செய்யவும் நிகழ்காலத்தினைக் கட்டியெழுப்பவும் எதிர்காலத்தினை உறுதிசெய்யவும் பயன்படுத்தப்போகின்றோம் என்பதே புலம்பெயர்தமிழர்களுக்கு முன்னாலே நிற்கும் கேள்வி.

எதிர்பாராத விதத்திலே தாக்கும் இயற்கையின் பேரழிவுகளின் பின்னே எங்கிருந்து ஆரம்பிப்பதென்று குழப்பமும் கலக்கமும் கொண்டிருக்கும் ஹெயிட்டி போன்ற சிறுநாடொன்றினதினையும்விட மோசமான சிந்தை+உள+கையறுநிலைகள், புலம் பெயர்ந்தவர்கள், பெயராதவர்கள், அவர்களின் நலன்விரும்பிகள் ஆகியோரைச் சுற்றிக்கிடக்கின்றன. இயற்கையான பேரழிவின் பின்னேயாவது, புறத்திலிருந்து உதவிகளின், ஆலோசனைகளின் அடிப்படைகளிலே எதிர்காலத்தினைக் கட்டியெழுப்பமுடியலாம். ஆனால், எவர் நண்பர், எவர் எதிரிகள் என்று அறியாத நிலையிலேயும் உயிர்பிழைத்திருப்பதாலே ஏற்படும் குற்றவுணர்வோடும் கடந்த ஓராண்டாக இருக்கும் சமூகம் கொள்ளவேண்டிய தன்னம்பிக்கையும் தெரிவும் தெளிவும் போராட்டகுணமும் அதிகம். அரசியலளவிலான போராட்டமுன்னெடுப்போடு உளவியல்ரீதியிலான ஈழத்தமிழர்நலன்களுக்கு எதிரானவர்களின் தொடர்தாக்குதல்களையும், சமயங்களிலே புரிந்துகொள்ளாதவளவுக்குக் குழம்பிப் போயிருக்கும் நட்புச்சக்திகள் தரும் அழுத்தங்களையும் எதிர்கொள்ளவேண்டியிருக்கும். நடைமுறைக்குச் சாத்தியமான, இருக்கும் பலத்தின் எல்லைக்கப்பாற்பட்டு உடனடியே அகலக்கால் விரிக்காது இயங்கவேண்டிய சூழ்நிலையிலே வகுத்துக்கொண்ட நெறிகளிலும் நோக்குகளிலும் சமரசம் செய்து கொள்ளமுடியாத நிர்ப்பந்தமும் எமக்கிருக்கின்றது.

ஈழத்திலே போரினாலே பாதிக்கப்பட்டிருப்பவர்களின் இன்றைய நிலைக்கு ஏதோ புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களிலே கணிசமானவர்களும் அவர்களின் ஆதரவாளர்களுமே காரணம்போலவும், இத்தனை நடந்துமுடிந்துபின்னும் அப்புலம்பெயரிகளின் தொடர் நடவடிக்கைகளினாலேயே ஈழத்திலே தமிழர்கள் மேலும் பாதிக்கப்படுவதுபோலவும் வாதங்கள் மீண்டும் மீண்டும் சில தரப்புகளாலே எழுதப்படுகின்றது. இத்தரப்புகளிலே

1. ஸ்ரீலங்கா அரசு பின்னாலிருக்க, முன்னாலே பேசும் 'புலம்பெயர் தமிழ்ப்பேச்சாளர்கள்' உண்டு;

2. தம்மோடு ஒத்தியங்காக் கருத்துவெளிப்படும்போதெல்லாம் பின்னாலே விடுதலைப்புலிகளிருப்பதான காலாகாலத்துப்பேரச்சத்திலே எதிர்க்கும் புலம்பெயர் இடதுசாரி உதிரிகள் அடக்கம்;

3. விடுதலைப்புலிகளின் மக்களுக்கு எதிரானதெனச் சொல்லப்படும் இறுதிக்காலகட்டச்செயற்பாடுகளினாலே அதுவரைநாள் அவர்களுடனேயே இருந்து இடம்மாற்றிக்கொண்டவர்களின் புலம்பெயர்நண்பர்கள் அடக்கம்;

4. தம் இருப்பினைப் பிரதிபலிக்கும் தமிழ் இலக்கியவாதிகளும் புரட்சிவாடிகளும் இந்திய ஊடகங்களும் "ஸ்ரீலங்காவுக்குப் போய்ப் போராடுங்கள்" என்று சொல்லும் இந்தியத்தேசியத்தோடு புலம்பெயர்ந்தவர்களும் அடக்கம்;

5. மேலாக, 'வன்னிநிலத்தில் இறந்தவர்களின் பிணத்திலே பதாகை கட்டிப் பிழைக்கின்றார்கள்' என்ற வகையிலே புலம்பெயர்ந்த தமிழர்களின் போராட்டங்களைக் கொழும்பிலிருந்து விமர்சிப்பவர்களும் அடக்கம்.

இவர்களையெல்லாம் எதிர்கொண்டு முன்னே செல்லவேண்டிய கட்டாயமும் கடப்பாடும் காலத்தினாலே புலம்பெயர்-ஈழத்தமிழர்களுக்கிருக்கின்றது.

ஈழத்திலே இருப்பவர்களின் துயர் ஏதோவொரு வகையிலே -இரத்த உறவுகள், நட்புகள் முதலாகி, குறைந்தளவு சுரண்டிக்கொண்டிருக்கும் குற்றவுளப்பாங்கென்றளவிலேனுங்கூட- புலத்திலேயிருக்கும் அவர்களைச் சேர்ந்தாரை, அவர்கள் நலன்களோடு தம்மைச் சேர்த்திருப்பாரை, மற்ற எந்த அந்நியரையும்விடப் பாதித்துக்கொண்டிருக்கின்றது. அம்மக்களுக்கான துயரினைத் துடைப்பதிலும் எதிர்காலத்திலே அவர்களின் உரிமை நிச்சயப்படுத்தப்படுவதற்கும் குரலை எழுப்பவேண்டிய சுதந்திரத்தினை ஓரளவுக்கேனும் கொண்டிருப்பவர்கள் புலம்பெயர்ந்தவர்களே. அவர்களை ஈழமக்களுக்கு எதிரானவர்களென்பதாக எதிர்ச்சக்திகள் தூக்கிநிறுத்தி நிறுவமுயல்வது அத்தகு குரல் எழுப்பக்கூடிய சுதந்திரத்தோடு அவர்கள் இருப்பதாலேயே. அதனாலே, ஈழத்திலிருக்கும் மக்களின் இன்றைக்கான உடனடித்தேவைகளோடு எதிர்காலத்திலே அவர்கள் தமது சுயநிர்ணய உரிமை கொண்டிருக்கச் செயற்படவேண்டியதும் புலம்பெயர்ந்தவர்களின் கடனாகின்றது. நாடுகடந்த அரசென்று குரலெழுப்புவது எவ்வகையிலே ஈழத்திலேயிருப்பவர்களுக்கு எதிரான செயற்பாடாகின்றது? ஸ்ரீலங்காவும் இந்தியாவும் பலஸ்தீனியத்தின் நாடுகடந்த அரசினை ஆதரித்திருக்கின்றன; புலம்பெயர்ந்த இந்தியமேட்டுக்குடி போன நூற்றாண்டின் ஆரம்பத்திலே இலண்டனிலே இருந்து இந்திய சுதந்திரத்துக்கான கருத்துகளை முன்வைத்து எழுப்பியிருக்கின்றது. அப்படியான நிலையிலே எதற்காக, புலம்பெயர்ந்த தமிழர்களின் குரல்கள் அப்படியாக எழக்கூடாதென இவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்? அக்குரலினை எழுப்புவதொன்றும் இன்றைக்குச் சிறை அகதிகளாகவோ தமிழர்பூமியிலே தொடர்ந்தெழும்பும் சிங்களக்குடியேற்றங்களுக்குள்ளும் இருக்கின்றவர்களுக்கோ சமகால உதவியினை மறுத்துக்கொண்டு நிகழ்வதாக எதற்காக (& எவராலே) ஒரு தோற்றம் எழுப்பப்படுகின்றது? ஈழத்தமிழர்கள் பாதிக்கப்பட்டிருக்கும் இன்றைய சூழலிலே அவர்களுக்கான சமகால வசதிகள், எதிர்கால சுயநிர்ணய உரிமைகள் இருக்கப்படவேண்டுமென்று சொல்லும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் எதற்காக வலுக்கட்டாயமாகப் புலிகளின் பினாமிகள், எச்சசொச்சங்கள் என்ற வகையிலே முற்றிலும் ஆதாரமற்றும் முறையற்றும் குற்றஞ் சாட்டப்படுகின்றனர்? விடுதலைப்புலிகள் சென்ற பாதை தவறென்று கொண்டாலும், அதற்காகவும் அதன் விளைவாக இன்று மட்டப்பட்டிருக்கும் தமிழர்வாழ்க்கைக்காகவும் எதிர்காலத்திலே ஈழத்திலே தமிழர் தொடர்ந்தும் இப்படியேனும் இரண்டாம்நிலைமக்களாகவே வாழ்வது நியாயப்படுத்தப்படவேண்டுமா?

ஸ்ரீலங்கா அரசும், இந்திய அரசும் மேற்கரசுகளின் அறிக்கைகளும் "கடந்தவை கடந்தவையாகவே இருக்கட்டும்" என்றளவிலே நடந்ததையெல்லாம் குழியிட்டு மூடிப்புதைத்துவிட்டு, ஈழத்தமிழர்களின் பிரச்சனைகளெல்லாம் விடுதலைப்புலிகளிலிருந்தே எழுந்தன என்பதுபோல, -விழுதுகளைத் தறித்துவிட்டு, வேர்களைக் கெல்லியதாகச் காட்டிக்- கடந்துபோகமுயல்கின்றன; தென்னாபிரிக்காவிலே அமைந்ததுபோல ஒரு மெய்யறிந்து மீளிணையும் விசாரணைக்குழுவினைக்கூட அமைப்பதற்கு இவர்கள் குரலெழும்பவில்லை. ஈழத்திலே தமிழர்கள் வடக்கிலும் கிழக்கிலும் இன்னமும் அடைபட்டுப் பாதி, அவலமான நிலையிலே இராணுவநிலையமைப்புகளிடையேயும் புதிதான சிங்களக்குடியேற்றங்களிடையேயும் மீதி இருக்கும்நிலையிலே தமக்கான குரல்களை அவர்களே எழுப்பமுடியுமென்றா அகிலம் எதிர்பார்க்கின்றது? கடந்த புலத்திலுஞ் சரி, முளைத்த நிலத்திலுஞ் சரி, கடந்த ஆண்டின் சடுதியான பேரிழப்பினைச் செரித்துக்கொள்ளமுடியாத நிலையிலே எம்மிடையே ஒரு பரந்த குற்றவுணர்வு ஆழவோடிக்கிடக்கிறது. ஒரு விபத்திலே கூடப் பயணித்தவர் இறந்துபோக நாம் மட்டும் தப்பிப்பிழைத்ததினாலே நடந்தவை எல்லாவற்றுக்கும் நாமே காரணமென்பதாக எம்மை நாமே மேலும் தண்டித்துக்கொண்டு திருப்திப்படும்வகையிலே ஏற்படும் குற்றவுணர்வு இது; சென்ற ஆண்டிலே எழுதப்பட்ட கதைகளிலும் கட்டுரைகளிலும் கவிதைகளிலும் இதனை மிகவும் வெளிப்படையாகவே காணமுடியும். ஆனால், இதுவே ஈழமக்களின் சுயநிர்ணயவுரிமைகளை மறுப்பவர்களுக்கும் ஸ்ரீலங்கா அரசின் பெருங்குற்றங்களையும் மீறல்களையும் நியாயப்படுத்தியோ குழிதோண்டிப் புதைக்கவோ முயல்கின்ற அரசுகளுக்கும் எம்மை ஆடவைக்கும் கோலாகின்றது.

"மறப்போம்; மன்னிப்போம்" முதல் "இலங்கை வாழ் சகல மக்களையும் ஆரத்தழுவி உழைக்கும்மக்கள்சார்ந்த போராட்டத்தினை அதிகாரவர்க்கத்துக்கெதிராக முன்னெடுத்தல்" ஊடாக, "இந்தியாவினையும் அதன் அரசியல்வாதிகள் & அரசதிகாரிகளையும் எம் அலுவல்களைக் கவனிக்கவிடுதல்" என்பதுவரையிலான மழுங்கடிக்கும் அனைத்துக்கோஷங்களின் பின்னான அரசியலினையும் நடைமுறைச்சாத்தியமின்மைகளையும் அடுத்தவர்கள் நலன்களையும் தெரிந்து தெளிந்திருக்கவேண்fடும். இவ்விடத்திலே ஈழத்தமிழர்நலனுக்கான எதிர்ப்புச்சக்திகள் இத்தனையையும் ஒதுக்கிவைத்துவிட்டு, விடுதலைப்புலிகளைமட்டும் மீளப்பரிசீலனை செய்வதனையே மீளமீளப் பேசுவதும், ஸ்ரீலங்கா அரசூடான நாட்டைப் பலப்படுத்துதலே நொந்திருக்கும் நிலத்தமிழர்களை உடனடியாகக் காக்குமென்றும் நோக்குகளை மழுங்கடிக்க முழுநேரமாக முயற்சிக்கும். சுயமான தம் நோவினையும் வாழ்வினையும் பேச வாய்ப்போ உளநிலையோ கொண்டிராத நிலையிலிருக்கும் நிலத்தமிழர்களுக்காக, அவர்களின் கூறுகளான புலம்பெயர் தமிழர்கள் பேசமுடியாதென்று கூறும் ஸ்ரீலங்கா & இந்திய அரசுகளுக்கு, அவ்வாறு அவ்வீழத்தமிழர்களுக்காகப் பேசுமுரிமையைத் தந்தது எது? கொன்று வென்று சிதைத்திருக்கும் அதிகாரமென்றே பதில் கிடைக்கமுடியும். ஈழத்தமிழர்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் ஈழத்திலிருக்கும் அவர்களே நிர்ணயிக்கவேண்டுமென்பதிலே எதுவிதமான மாற்றுக்கருத்துமில்லை. ஆனால், இப்படியாக வென்றவர்கள் தாமே நலன்காக்கும் இடைத்தரகர்களாகக் காட்டிக்கொள்ளும்வேளையிலே, அப்படியான அதிகாரசக்திகளைத் தொடர்ந்தும் கதிரையின் விளிம்பிலே வைத்துக்கொள்ளவும் நிலத்தமிழர்களின் நோவினைத் தாங்கிக்கொள்ளவும் புலம்பெயர்தமிழர்கள் நாளாந்தம் ஏதோ விதத்திலே பேசவும் செயற்பட்டுமே ஆகவேண்டும். வருங்காலச்சந்ததிகளும் இச்சுமையினை, தாங்கள் வெறும் தற்காலிகக்காப்பாளர்களும் பேச்சாளர்களுமே என்ற அளவிலே தாங்கிச் செல்லவேவேண்டும். இதனைச் சொல்லவும் செய்யவும் எவரும் விடுதலைப்புலிகளை இயக்கரீதியாக ஆதரித்தவர்களாகவோ, நாடுகடந்த அரசு/வட்டுக்கோட்டைத்தீர்மானம் இவற்றோடு சம்பந்தப்பட்டவர்களாகவோ இருக்கத்தேவையில்லை. வெறுமனே தாயோ தம்பியோ அக்காவோ கூடப்படித்த நண்பனோ இன்னமும் அந்நிலத்திலே மிச்சமாக விடப்பட்டும் விடுமுறைக்கும் நாட்டுக்குப் போகமுடியாதிருக்கும் சாதாரண புலம்பெயர்தமிழனாகவிருத்தலே போதுமானது; இவர்களின் துயரை உணர்ந்து கொண்ட மற்றைய புலம்பெயர்தமிழராக இருத்தல் போதுமானது. சென்ற ஆண்டும் இவ்வாண்டும் மேற்கிலே நிகழும் ஊர்வலங்களிலே கலந்துகொள்கின்றவர்களிலே பலர் இவ்வாறுதான் இருக்கின்றார்கள். இத்தகு அக்கறையை வெறுமனே புலிகளின் பினாமித்தனமென்றும் பாசிசஓநாய்களின் பின்னே நடக்கும் மந்தைக்கூட்டமென்றும் புலம்பெயர்நாடுகளிலே குளிர்பதன அறைகளிலேயிருந்து தட்டச்சுகின்றதாகவும் சுருக்கியோ திரித்தோ சொல்கின்றவர்கள், இதுவரை ஈழநிலத்திலே வாழும் மக்களுக்காகச் சாதித்தவற்றின் எல்லைகள் நான்கு பதிவுகளின் எச்சமாகவும் பேஸ்புக்கின் குறிப்பேடுகளாகவும் உருவிற்றர் கீச்சுக்களின் முடக்கவிதைகளாகவுமே அடங்கிமடிந்துபோகின்றன. களத்திலே இறந்தவர்களின் பிணத்திலே பதாகை புலத்திலே கட்டிப் பிழைக்கின்றார்கள் என்ற கவிதையை எழுதிக்கொண்டிருப்பவர்களுக்கு, தினக்கூலியை விட்டுவிட்டுத்தான் வீதிகளிலே பனியிலும் வெயிலிலும் புலம்பெயர்ந்தமக்கள் பலர் விரைவீதிகளிலே கையைக் கோர்த்துக்கொண்டு இறங்கினார்களேயொழிய, "சுறா" படத்துக்குச் சூடம் ஏற்றுவதையும் விஜய் படத்துக்குப் பால்வார்க்கும் கணத்தினையும் ஐபில் கிரிக்கெட் பந்துக்குப் பந்து விவரணை இணையத்திலே செய்யும் களியாட்டத்தினையும் தவிர்த்துவிட்ட நேரத்திலல்ல என்பது புரியாமலிருக்கமுடியாது.

இந்நிலையிலே எக்காரணம் கொண்டும் புலம்பெயர்ந்த தமிழர்கள், சொந்தநிலத்திலே அகதிகளாக வாழும் தமிழர்களின் இன்றைய நிலையை மேம்படுத்த (ஸ்ரீலங்கா அரசுசார் அமைப்புகள், குழுக்கள் இவற்றினூடாக) உதவவேண்டுமென்பதனை மட்டுமே ஒற்றை நோக்காகக் கொண்டு நடக்கமுடியாது; நடக்கவுங்கூடாது. புலம்பெயர் ஈழ ஆதரவுத்தமிழர்களின் அமைப்பார்த்த குழுச்செயற்பாடுகள் அடிப்படையிலே மூன்று நோக்குகளைத் நிறைவேற்றும் திட்டங்களைக் கொண்டிருக்கவேண்டும்:

ஒன்று- கடந்த காலத்தின் ஸ்ரீலங்கா அரசினது மனிதவுரிமைமீறல்களுக்கான செயற்பாடுகளை ஆவணப்படுத்துதலும் அதற்கான நியாயமும் ஈடும் கேட்டு அகிலம்சார் நியாயம்காண்குழுவின் முன்னாலே நிறுத்துதல்;

இரண்டாவது - உடனடித்தேவையாக ஈழநிலத்திலே மக்களின் இருப்பினையும் இருப்பிடங்களையும் -ஸ்ரீலங்கா அரசின் அதிகார & பொருளாதாரக்கைகளைப் பலப்படுத்தாத வகையிலே- அகிலம்சார்ந்த அமைப்புகளோடு தம்மை இணைத்துக்கொண்டு செயற்படுவதன்மூலம் கட்டியெழுப்பலும் தக்கவைத்தலும் மேம்படுத்தலும்;

மூன்றாவது - எதிர்காலத்திலே கடந்த காலம் போல மீண்டும் ஒரு பெருங்கொலைக்களமாக நிலம்மாறாது தடுத்தலும் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணயவுரிமை உறுதி செய்யப்படும் வகையிலே நிலத்தோடு ஆரோக்கியமான உறவினைப் பேணலும் புலத்திலே இதற்கான அடித்தளமாக வரும் தன் சந்ததியினரை பொருளாதார, அரசியற்பலம் பெருக -தனித்திராது கலந்திருக்க- நிறுத்துதலும்.

கடவுள்

Wednesday, May 12, 2010

அவர்கள் கடவுளைத் தேடித்திரிந்தபோது, அவர் தன்னவரின் 'சிச்ருஷைக்கும் சில்மிசத்துக்கும்' பேரஞ்சி ஓர் இடிந்த கருங்கல் மண்டப இருட்டுக்குளிருக்குள்ளே தனியே விறைத்திருந்தார். கடைசியாக, அவர் ஓடத்தொடங்க முதற்கணம் தன்னைச் சூழ அவர்கள் இருந்ததைக் கண்டிருந்தார். தன் இருத்தலுக்கு அவர்களை முழுக்க முழுக்க நம்பியிருந்ததற்குக்கூட தன்னிற்றானே கழிவிரக்கம் கொள்ளவும்கூட முடியாத அந்நேரத்தில், அவரை ஆழ்பயம் பிடித்தாட்டியது.

கடவுளுக்கு, தனது குழந்தைப்பருவம் நினைவுக்கு வந்தது. நினைவாற் தொட்டாலே பொடிப்பொடியாகி உதிர்ந்து காற்றாகிப் போகக்கூடும் மிகவும் புராதனமான காலம். எல்லோரும் அவரை அவரின் அழகுக்காக மட்டும் நேசித்த ஆரம்ப அவத்தைப்பொழுது அது; சொந்தமேயற்ற கொழுக்குமொழுக்குக் குண்டுக்குழந்தையை தமது சொந்தம் என்று சொல்லித் தூக்கிக் கொண்டாட, உலகமே வரிசையிலே நின்ற வேளை. கடவுளுக்கும்கூட அப்போது, தன் வசதியை நிறைவேற்றக்கூடிய சொந்தங்களின் மணிக்கட்டுகளிலே தன் குழந்தைக்குண்டிச்சதையினை அழுத்திக் குந்தி, கன்னத்தோடு கன்னம் வைத்து அழுத்தித் தேய்த்து, முத்தத்துக்கொரு மோதகமோ முறுக்கோ பெறுவதிலே அதீத ஆனந்தம்; ஆதிமுதலே, வாய்க்கப்பெற்றதெல்லாம் கழிக்காமலே முழுக்கப் புசிக்கின்றவர்தான் ஆண்டவன்! அனர்த்தனமே இல்லாத அந்தக்காலம்.... பெருமூச்செறிந்துகொண்டவருக்கு தனக்கு வாழ்க்கை சலிப்படையத்தொடங்கியது எப்போது என்று முன்னைய ஞாபகத்திலே வராகக்கொம்பு கொண்டு கிளறித் தேடத்தேடவும் தேவைப்பட்ட விடை தெரியவில்லை. இருளுக்கப்பால், எழுந்த இடிந்த சுவரின் ஒவ்வோர் ஒலியதிர்விற்கும் காரையுதிர்வுக்கும் அஞ்சிக் குறுகினார்.

மூஞ்சூறொன்று தன் மூஞ்சி மீசைமேல் மூசி அவரை முகர்ந்து விட்டு, வாலாற் தட்டியபடி விலகிப்போனது. அலட்சியம்!! காலத்தினைத் தன் கையை விட்டு கட்டவிழ்த்துவிட்ட கணத்தினை நொந்துகொண்டார். தனது செல்வாக்கினை அஞ்சுதலுக்கு இழந்தாரா அல்லது கெஞ்சுதலுக்கு இழந்தாரா என்றுகூட இன்றைக்கு அவருக்குச் சொல்லத் தெரியவில்லை. உள்ளதையெல்லாம் கண்டவர்க்கும் கேட்டவர்க்கும் கையள்ளி வாரிக்கொடுத்துக்கொண்டு, வரட்டுத்தான்தோன்றித்தனத்திலே எதேச்சதிகாரமும் செய்து திரிந்த இளமையை எண்ணிக்கொண்டார். அந்த ஊதாரிப்பருவத்தை திரும்ப வாழப்பெற்றால், தான் காலத்தினை மீளத் தன் கைக்குள்ளே கொண்டு வரமுடியுமென்றும் இன்றைக்குக் கோணலாகத் தெரியும் எத்தனையோ நிகழ்வுகளினை நீட்டி நேராக்கமுடியுமென்றும் மெல்லியதாக வாய்விட்டு அரற்றியதனைக் கேட்டு யாருமிங்கு சிரித்தார்களோ? துணுக்குற்றவர், ஓடிய ஊத்தைச்சாக்கடையில் பாத்திரம் புண்டொழுகிய பாலுக்கேங்கியதை மறந்தார்; சுற்றும்முற்றும் திரும்பாமலே, இருட்டிலும் பொருட்கள் ஏற்றிய வெளிவர்ணத்தைப் பார்க்கக்கூடிய சக்தி படைத்தவர் இறைவன்; அந்த முகர்ந்த மூஞ்சூறைத் தவிர எதையும் அடர்ந்த இருள் அவருக்கு உணர்த்தவில்லை. மூஞ்சூறுகளைச் சிரிக்கும்தன்மையுடைத்ததாய் -அதுவும் தன்னைப்பார்த்து- இறைவன் படைத்ததில்லை. பெருவிரலழுத்தப் பிய்ந்து நீர்ச்சதை பீறிடும் நுங்கின் நொய்கண்ணொத்த தன் ஞானவிழியின் ஊற்றுமுனையிலே தனக்காகாக் கொடுந்தீமையேதும் கருவண்டாய் உருமாறி உட்கார்ந்து அடைத்ததோ என்று அதிர்ந்தார். இறுதியிலே, "ஒன்றாகியும் பலவாகியும் ஒரே நேரத்திலே இருப்பதே நான்" என்று சொல்லிக்கொண்டு, தன் சுயவிமர்சனத்துக்குத் தானே நகைத்திருக்கக்கூடுமென்று தனக்கொரு சமாதானம் தேடிக் கொண்டார்.

தொந்தரவான மனிதர்கள் அற்ற விளையாட்டு மூஞ்சூறுகளுடான கர்ப்பக்கிரக இருட்பொழுதுகள் கடவுளுக்குப் புதிதானதல்ல என்றபோதும், இத்தகைய அஞ்ஞாதவாசத்தின்கீழ் எதுதான் புதிராக இராது? அவருக்கு மனிதர்கள்மீது பொறாமை வந்தது; அது, வழியவழியக் கொட்டும் மகிழ்ச்சியினை மற்றவன் கேட்டுவிடப்போகின்றானோவென்று வதவதவென்று அள்ளி வாய்க்குள்ளே கொட்டிக்கொள்கின்றவர்கள், சின்னச்சிராயன்று சிகை சிலும்பிச் சீண்டும் துன்பத்தினையும்கூட அவர்மீது அப்படியே குற்றச்சாட்டோடு, -தாம் சுவைக்கத் தின்று யாரோ வேண்டியள்ளத் தள்ளுவதாய் தம் மூக்குகளைப் பொத்தி பொதுவிடத்திற் கழித்த மலமாய்- தள்ளிவிட்டுப் போய்விடுகின்றார்களே என்ற பொறாத தன்மையல்ல; கடவுள் மற்றவர்களின் தற்சிந்தைச்செயலுக்கு முற்றாய் வழிவிட்டுவிடுகின்ற வழிவகையின் சூத்ரதாரி; அதனால், தன்மீது சுமத்தப்படும் குற்றத்தையும் துன்பத்தையும் மீள்தன்மையில்லாத்தளமாய் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் என்று தார்மீகப்பொறுப்பு ஏற்றுக்கொள்கின்றவர். ஆனால், தனது சொந்தத்துன்பத்தினையும் வேதனையினையும் சொல்லித் தள்ளி அடுத்த வாழ்கணத்திலே ஆழக் கை நனைக்கவென்றொரு இறைசுவர் இல்லாதது ஏக்கத்தையும் பொறாமையையும் தந்தது.... கொடுத்துவைத்தவர்கள் இந்த மனிதர்கள். ஹ¥ம்!!

சுற்றுமுற்றும் அதிர்வுகளும் உதிர்வுகளும் சட்டென்று நின்றனவாய் உணர்ந்தார்; சட்டென நிற்கும் இயற்கையின் இயக்கங்கள் நல்லதற்கல்ல. எண்ணவிழையை அரையிற் தொங்கவறுத்து இருப்புச்சூழலுக்குச் சுதாரித்துக்கொள்ளமுன், மண்டபக்கதவுகள் மாரடித்துத் திறந்துகொண்டன; ஒன்றின்மேலாய் இன்னொன்றாய் படிந்தும் பிளந்தும் பரவி நகரும் நிழல்களின் அசைவுகளின் பின்னாலிருந்து அங்குமிங்குமாய் வந்த ஒளிக்கீற்றுகள் கடவுளின் கண்மணிகளுக்கு ஊசிகளைச் சொரிந்தன:- "ஒளியும் மறந்து வெறுக்கும்வண்ணம் அதிககாலம் இருட்டுக்குள் இருந்துகொண்டேன்." கூசிய கண்களூடு இருட்பொந்திலே பதுங்கும் மூஞ்சூறுகளையும் எலிகளையும்கூடக் காணமுடியவில்லை. இறுதிப்புலனும் எரிந்தறுந்த முழுத்தீவு.

எவரோ "இங்கே இன்னொருவன்" என்று வெளிவாயிலை நோக்கித் திரும்பியும் திரும்பாமலும் அலறியது, குரல் சுருங்கிய அறைச்சுவர்களிலே முட்டிக்கீறி அங்குமிங்கும் எகிறிப் பந்தடித்து அணைகின்ற விதத்திலே புரியக்கூடியதாக இருந்தது;

வெறுஞ்சுவரோடு சுவராக உருவம் தெரியாமல் உறைந்திருந்தவரை ஒருவன் கண்டு கொண்டான் போலும்; "அதோ! அங்கேயிருக்கின்றான்"; அவன் தன்னைக் கண்டுதான் கத்தினானா, அல்லது கூட்டத்தினரின் குழப்பத்திலே தான் கோலோச்சக் கத்தினானா என்பது கடவுளுக்குத் தெரியவில்லை. நிறமற்ற நீரின் நிறமும் நிறமில்லாநிறமெனப் பெயர்கொண்டதுபோல, தன் உருவமின்மையும் தனக்கோர் உருக்காட்டியானது சூக்குமசரீரனுக்குச் சோர்வைத் தந்தது. கத்தியவன் பின்னாலிருந்து பாய்ந்தவர்கள், கடவுளைச் சுவரிலிருந்து - இரத்தம் உறுஞ்சும் தேயிலைத்தோட்ட அட்டையைப்போல்- பிய்த்து நிலத்திலே போட்டார்கள்; அடையாளம் கண்டதாய்க் காட்டிக்கொண்டவன் முகத்தைப் பார்த்தார்கள்; நெடுக்கிய நிலைக்குத்துநிலை பெயர்த்துக் கிடைப்போட்ட சிலையான கடவுளும்கூட கத்தியவன் முகத்தைப் பார்த்தார்; அவன்தான்; அவரின் நெருக்கத்துக்கும் விசுவாசத்துக்குமுரியவனான தரகன்தான்; அவரது ஐம்புலனும் அறிநிலையும் மறைதிரையுமானவன். அவரின் தொழில்நுட்பங்களின் முதற்சீடன்; கடின உழைப்பாளி; அவனிலே தன் வளர்ச்சிக்காலத்தெறிப்பைக் கண்டே முதலடிப்பொடியாக அவர் தத்தெடுத்திருந்தார்.

இருட்டிலே தேவமாறாட்டம் கொண்டவன், வெளிச்சத்திலே தன்னை அடையாளம் கண்டு தூக்கித் தோளிலே போட்டு ஊர்வலம் போகப்போகின்றான் என்ற எண்ணம் அவருக்கு நிம்மதியைத் தந்தது; சனம் கேட்கக்கேட்க, கொடுத்துக்கொண்டே இருந்ததால் தன் மீது அவர்களுக்கு மதிப்பு மங்கி, 'கேட்பது எம் உரிமை; தரவேண்டியது உம் கடமை' என்ற நிலைமை மேலோங்கியதாலே தன் அருமையை நிலைநாட்ட ஓடியது தான் எண்ணியதுபோல அருமையாகவே வேலை செய்திருப்பதை எண்ணித் தன்னைத் தானே பாராட்டிக் கொண்டு எழுந்திருக்க முயன்றார்; "தெய்வத்தை இன்றாவது தேடியலைந்தீர்களா, குஞ்சுமானுடங்களே? உப்பில்லாவிட்டாற்றான் தெரியும் உப்பின் அருமை; அப்பன் இல்லாவிட்டாற்றான் தெரியும் அப்பனின் அருமை"; கேலிப்புன்னகை, மண்டபமண்ணைத் தொட்ட, கோபுரத்தைப் பார்த்த, மற்றெல்லா.... அவரது அத்தனை முகக்கடைவாய்களிலும் அரும்பியது. கொஞ்சநேரம் மனிதமுகங்களின் நவரசங்களுக்குப் பயந்தோடி ஒளிந்திருந்தாலும், இறுதியிலே இப்படியாகத் தான் எவ்வளவு உயர்ந்தவன் என்று தன் சட்டத்திட்டங்களின்கீழ் நிரூபித்தறிந்து கொள்ளும் கணங்கள் இன்பகரமானவை; திருப்தியைத் தருகின்றவை...... பெருமிதம் அகத்துள்ளே முற்றி தேஜஸ் தன்னைச் சுற்றிப் பெருகிப் பரவுவதை அவரால், அறிகிடைநிலையிலும் அறியக்கூடியதாகவிருந்தது.

சுற்றிய ஒளியிலேதான் கண்டார்: அவரின் அடிப்பொடியின் முகம் மிகவும் விகாரமானது. "மண்டபத்துக்கு வெளியே இழுத்துப்போங்கள்" - கத்தினான்; "அங்கும் போலி! இங்கும் போலி!! எங்கெங்கும்...." தன்னுள் உளச்சோர்வும் கூட்டத்திற் பரிதாபமும் கடவுளிலே காட்டமும் கொண்டதை ஒருமித்துச் சொல்லும் குரலிலே அவனுக்குக் கத்தத்தெரிந்திருந்தது. "அடிப்பொடி! நன்றாய்ப் பாரடா என்னை; இருட்டிலே அழுக்குச்சுவரிலே அரூபனாயிருந்தவனையும் அடையாளம் கண்ட உனக்கு, இந்த ஒளிக்குழம்புள் இத்தனைநாள் நீ கைகட்டிக் கால் சிரசேற்றிச் சேவகம் செய்த என்னைத் தெரியவில்லையா? அடே! ஒரு நாளிலே மறக்கும்விதமாகவா யுகம் கண்டு பார்த்த என்முகமும் கோலமும் ஆகிப்போனதுனக்கு?" அதட்டினார்.

"எல்லாப்போலிகளின் நாடகங்களும் அபிநயங்களும் ஏன் இப்படி பாவபேதமின்றி ஒற்றைவார்ப்பிலே செய்தவையாக இருக்கின்றன?! இவனுக்கு முன்னாலே பார்த்த போலிகள் நடத்தைகளுக்கும் இவனதுக்கும் ஏதேனும் வித்தியாசமிருக்காது என்று அப்போதே சொன்னேனே, பார்த்தீர்களா? அதே வெல்ல அச்சு" - அடிப்பொடி சனத்தைப் பார்த்துக் கொக்கரித்துவிட்டு, இவரின் இடுப்பிலே உதைந்தான். கடவுளுக்கு நிலை ஏனோ விபரீதமாக மாறியிருப்பது மெல்லப் புரிய ஆரம்பித்தது.

இன்னமும் கூட்டம் பின்னால் வருவது தெரிகின்றது. கூட்டம்கூட்டமாக நகர்ந்து தம்மிலிருந்து வேறாய், ஒளிந்திருக்கும் மனிதர்களினையோ தம்பாட்டிற்கலையும் மிருகங்களையோ அடையாளம், தோல் சுரண்டிச்சுரண்டித் தேடுவதற்குப் பெயர், வேட்டை; கடவுளுக்குத் தெரியும். கடவுளும் வேட்டை ஆடியதுண்டு; அவர்பேரிலும் ஆடப்படுவதையும் ஆட்டப்படுவதையும் அவர் அறிந்ததுண்டு. அப்போதெல்லாம், வேட்டைக்குறியிலும்விட, அதைக் காட்டிக்கொடுக்கின்றவர்களினை அடையாளம் கண்டுகொள்கின்றதையே கடவுள் குறியாகக் கொண்டிருந்தார்; பலிகளைப் பிடித்துத் தருகின்றவர்களைக் கொலுப்படியிலே மேல்நோக்கி விரைவாக நகர்த்தியவருக்கு, அவர்களின் விசுவாசத்தை ஏற்றுக்கொண்டதை உணர்த்த அதுவொன்றுதான் அடையாளம் என்ற அபிப்பிராயம் இருந்தது.

'என் ஏவலாளர்கள் என்று சொல்லிக்கொள்கின்ற கணத்திலே என்னைத் தம் ஏவலாளன் ஆக்கிக்கொள்கின்றவர்களிலே அண்டத்தினை நான் முற்றாகப் பாரம்கொடுத்துவிட்டுச் சுமையின்றி மிதக்கத்தொடங்கும் நேரச்சொட்டின் போதையை நான் நுகரத்தொடங்கிய கணத்துக்கு முன்னர்....' - கடவுள் தனக்கினிதான சூழலுக்குத் தற்காலிகமாகவேனும் மீள முயன்றார். நிலவரம் ஏதாக இருந்தாலும், 'சாவுக்குத் தான் பயந்தவனில்லை' என்று ஒருவித அர்த்தமற்ற தன்னம்பிக்கையை அடிக்கடி உதடு பிரித்து முணுமுணுத்துக்கொண்டார். தனக்கும்கூடச் சாவு வரும் என்று ஏற்கனவே தெரியாதவரில்லைத்தான் என்றாலும், இத்தகைய ஒரு சூழ்நிலையிலே அ·தமைவதை அவர் முற்றாக விரும்பவில்லை.

"மண்டபத்துக்கு வெளியே முற்றத்துக்குக் கொண்டு போவோம்; வாருங்கள்" -கத்தியவன், வேறு யாருந்தான் அந்த இழுத்துப்போகும் செயலைச் செய்யவேண்டும் என்பதிலும் உறுதியானவனாக நின்றான். கூட்டத்திலிருந்து சில ஆர்வமுள்ள இளைஞர்கள் பாய்ந்து வந்தார்கள்; "அடிப்பொடிக்கும் அடிப்பொடிகள்" -கடவுளுக்குச் சிரிப்பும் வெறுப்பும் அச்சமும் ஒன்றையன்று முட்டியடித்தன. நிலம் முட்டிய முகமும் முதுகும் சிராயச்சிராய இழுத்துப்போனார்கள்; அடிப்பொடி முன்னால், ஒரு குழந்தையைப் பலிபீடத்திலிடவோ, ஒரு குற்றவாளியைக் கழுவேற்றவோ இட்டுச்செல்லும் சிறுதானைத்தலைவன்போல, விலகி வழிவிடும் கூட்டத்திலே தனக்கான அங்கீகாரத்தை விழியாலே தேடிக்கொண்டு, கிடைத்தபோதிலே சாய்தலையால் ஏற்றுக்கொண்டும் நெஞ்சை நிமிர்த்தி நடந்தான்.

மண்டபத்தின் வெளியிலே ஒரு தாயக்கூட்டமாக நிரையிலும் நிரலிலும் நிறையச் சிலுவைகள்; உடல்கள் தூக்கியறையப்பட்டும் காத்துக்கொண்டதுமான சிலுவைகள்; ஆடையணிகள் மாறுபட்டுக்கிடந்தாலும், தூக்கி அறையப்பட்ட உருவங்களெல்லாம் அவருடையதாகவிருந்தன. வெற்றுச்சிலுவையன்றின் முன்னர் நிறுத்தப்பட்ட கடவுளுக்குக் கண்கள் இருட்டின; இத்தனைநாள் அள்ளி அள்ளித் திகட்டத்திகட்டக்கொடுக்கையிலே பருக்கையிலே மறுத்து ஏற்காமலே பெரியமனிதத்தனம் காட்டிக்கிடந்தவர், முதன்முதலிலே பசியை, தாகத்தை உணர்ந்தார். கவளச்சோறும் கிண்ணநீரும் அடிப்பொடியிடம் கேட்டார்.

"நீதான் கடவுளென்றால், எங்களுக்குத் தரவேண்டியவன் நீ" - அவரிடம் கொக்கரித்துவிட்டு மக்களைப் பார்த்து பார்வையிலே ஆமோதிப்புக் கேட்டுக் கேள்வி தொடுத்தான், அடிப்பொடி.

"அதுதானே? நீதான் கடவுளென்றால், எங்களுக்குத் தரவேண்டியவள் நீயேதான்" - அடிப்பொடியின் இளைய அடிப்பொடியருவன் கைச்சாட்டையைக் காற்றிலே சொடுக்கி ஒரு யுகப்பிறழ்ச்சிக்கு நியாயம் கேட்பவன் என்ற பாவத்திலே சொற்களை அடிக்கண்டத்து நரம்புகள் அதிரக்கக்கினான்.

"அப்படித்தான்; பசியையும் தாகத்தையும் போக்கும் கடவுளைத் தேடித்தானே எங்கள் அலைச்சலெல்லாம்; எங்கள் தோற்றத்தைக் கண்டுமா வாய்த்தீனியும் துளிநீரும் கேட்கிறாய்?" - வியர்வைநாற்றம் கடவுளின் எல்லாச்செவிப்பறைகளிலும் அறைந்து எதிரொலித்து அடங்கியது.

இப்போதுதான் கடவுள் சுற்றுமுற்றும் பார்த்தார். அடிப்பொடியைத் தவிர்த்துவிட்டால், மிகுதியெல்லாம் சுருங்கிய தோல் துருத்தித்தொங்கும் எலும்புகள் பிளந்து நிலம் விழாது அடக்கிக் காத்திருக்க மூச்சுக்காற்றிலே உலாவும் உருக்கள்.... சிறிதும் பெரிதுமாக...ஒன்றையன்று தாங்கிய அதேநேரத்திலே ஒன்றோடொன்று போட்டியிட்டுக்கொண்டு..... இத்தனை கால அவரது கோலோச்சுகையிலே, அவரின் திரைக்கப்பாலிருந்து கால இடைவெளியில்லாமல் நெருக்கி நார் கோர்த்த சரமாக அடிப்பொடி அழைத்துவந்த மனிதர்கள் இவ்வகைப்பட்டவர்களல்ல; அவர்களின் தேவைகளைப் போலவே அவருடைய வாயிலும் வரமும் அவர்களுக்குப் போதுமாயிருக்கவில்லை; "இவர்களிலே ஒருவரையும் நான் காணவில்லையே? அடிப்பொடி இப்படியான மனிதர்களைப் பற்றியேதும் என்னிடம் சொல் சொட்டவில்லையே??" கடவுளின் வினாக்களும் திகைப்பும் அனுபவமும் தன்விளக்கமும் விரிந்துகொண்டே போக, அடிப்பொடியைப் பார்த்தார்.

அவன் கண்டும் காணாதவனாய் தன் கண்ணசைவுக்காகக் காத்திருந்த சின்ன அடிப்பொடிகளை நோக்கினான். ஆண்டாண்டு பழக்கப்பட்ட தொழிலொன்றின் நாளாந்தக்கிரியையன்றைப் புரிகின்ற கடைநிலை ஊழியராய் முள்முடிதாங்கிய கையுடனொருவனும் வலக்கை ஆணிகளும் இடக்கை சிறுசுத்தியலும் கொண்டு இன்னொருவனும் கடவுளை நோக்கி நகர்ந்தனர். ஒரு கணத்துக்கு அவருக்குத் தான் வரலாற்றிலே காலபேதப்பட்ட உணர்வு வெடித்து, பின் வடிந்தது; "இப்போது நான் தக்கிக்கவேண்டும்." - தற்காலத்துக்குச் சிலிர்த்துக்கொண்டார்.

"எதற்கு?" கடவுளின் குரல் அதிர்ந்து, ஆணி, முடியுடன் நகர்ந்தவர்கள் தொடங்கி, அடிப்பொடி, கூட்டம் என நிலைப்படுதல் அலையாகச் செல்லத் தொடர்ந்தது, "நான் போலியென்றால், என் மீதான குற்றங்கள் எவை? இங்கு எவரேனும் ஒருவர் என்னாலே பாதிக்கப்பட்டதாக சொன்னாலுங்கூட எனக்கான எந்தத் தண்டனையும் ஏற்றுக்கொள்வேன்" - தான் என்றைக்குமே சந்திக்காத இவர்கள் தன்னிலே என்ன குற்றம் சுமத்தமுடியும் என்ற திடமான நம்பிக்கை அவருக்குப் பிறந்திருந்தது.

அடிப்பொடி, நிமிட இடைவெளியும் விடவில்லை...."பார்த்தீர்களா?... திரும்பவும்.... தங்களைக் கடவுள் என்று பகிரங்கப்படுத்திக்கொள்ளும் போலிகளின் செய்கைகள் ஒரே சிற்பி செதுக்கிய சிலைகள்போல...ஒரே குற்றப்பத்திரிகையை ஆள் தூங்கும் ஒவ்வொரு சிலுவையின்முன்னும் சுமத்திச்சுமத்தி ஓர் இயந்திரமாகிப்போனேன். இயந்திரமாக உருவானவனா நான்??" - அடிப்பொடியின் குரல் இவ்விடத்திலே உடைந்து தடங்க, "இல்லையில்லை; போலிகளைப் பற்றிய பிம்பங்களை உடைத்தெறிந்த நீங்கள் எமது விமோசனத்துக்கான வழிகாட்டி போன்றவர்" என்று அடிப்பொடியின் அடிப்பொடிகள் ஒத்த குரலிலே உரத்துக்கூறினார்கள்... மீண்டும் அதே ஒத்தூதும்கிரியை.... சிறிது தயக்கத்தின்பின்னர், மெல்லியகுரலிலே சனங்களின் ஆமோதிப்புப்பரவியது.

தன் இடுப்புக்கச்சையின் அடியிலிருந்து ஒரு கசங்கிய சுருளை எடுத்து அடிப்பொடி விரிக்க, தேவப்பிரசங்கம் கேட்கும் பாவனைக்குக் கூட்டம் தன்னைத் தயார்ப்படுத்தியது. "இந்தக்குற்ற ஆவணம், போலி இலக்கதாரி இத்தனையாவதானவன் மேலே சமர்ப்பிக்கப்படுகின்றது; இவன் மீதான குற்றங்கள் பின்வருகின்ற இரண்டிலே ஏதாவதொன்றாகலாம்; முதலாவது, தன்னைக் கடவுள் என்று பொய்யாகக் கூறிப் பித்தலாட்டம் செய்வது; கடவுளுக்குப் பசிப்பதில்லை; பசித்தாலும்கூட, அவர் பருகத் தண்ணீரும் புசிக்க வெற்றிலையும் மனிதரிடம் யாசிக்கக்கூடியவரல்லர். அதனால், இவன் கடவுளாக இருக்கமுடியாது....."

இந்த இடத்திலே கடவுள் குறுக்கிட்டுப் பாய்ந்தார்; "கடவுளுக்குப் பசிப்பதில்லை; தாகமேற்படாது என்பதற்கான ஆதாரமென்ன?"......"நான் கடவுளின் அடிப்பொடியாக நூற்றாண்டுகள் இருந்திருக்கின்றேன். கடவுள் பசித்து, தனக்குப் பிடித்ததென்று எதையும் மொறுமொறுக்கத் தின்றோ, தாகமேற்பட்டதென்று சலசலக்கும் எதையும் அருந்தியோ நான் கண்டதில்லை." - அடித்துச் சொன்னான் அடிப்பொடி.

"அடே அடிப்பொடி! கண்ணிலே வஞ்சகத்தை நழுவவிட்டுக்கொண்டு பேசாதே" -கடவுள் பொறுமையிழந்தார்.

"..... இவர் கடவுள்தான் என்றிருந்தால், இவர் இழைத்த குற்றம் பொய்யாகத் தன்னை அடையாளப்படுத்துவதிலும்விடப் பெரிது; படைத்த கடவுளின் கடமை என்ன?" -அடிப்பொடி தொடர்ந்தான்.

"படைத்த மக்களைக் காத்தலும் அவர்களைத் தான் கவனிக்கின்றேனென்பதை அவர்களுக்குச் சந்தர்ப்பம் வாய்க்கை அடிக்கடி காட்சி தந்து உணர்த்திக்கொள்ளுதல்" - அடிப்பொடியின் பொடியர்கள் கத்தினார்கள்...

...."இவனை மண்டபத்துச் சுவரிலே உருவமில்லாமல் திசைப்பட்டுக் கிடக்கமுன்னர் பார்த்தவர்கள் எவராவது இங்கே இருக்கின்றீர்களா?"

"இல்லை! இல்லவேயில்லை!!" - கூட்டம்.

"அப்படியானால், இவன் கடவுளாக இருந்து தான் பெற்ற மக்களுக்கான கடமையைச் செய்தானா? அப்படிச் செய்யவில்லை என்பது மிகத்தெளிவு; அப்படிச் செய்யாதவிடத்திலே இவன் தன் கடமையிலேயிருந்து வழுவியவனாகவும் தன்புத்திரர்களின் கஷ்டங்களையே மறைந்திருந்து பார்த்து இரசிக்கும் கொடூரத்தன்மை கொண்டவன் அல்லவா?"....

கடவுளுக்கு அடிப்பொடி எப்படி வலையை விரித்துத் தன்னைத் தள்ளிச் சுருக்கை இழுக்கத்தொடங்கியிருக்கின்றான் என்று தெரியத்தொடங்கியது..... "பாவி, இவன் இத்தனை நாளாக பொருளும் உடலும் விளைந்து கிடந்தவர்களைக் கொண்டு வந்து 'அதுவும்கூடப் போதாமை' என்ற பொருமல் மட்டும் புழுத்துப்போயிருந்தவர்களுக்கு விழற்றிசையிலே நீர் பாய்ச்சவிட்டுவிட்டு, திரைக்கப்பால், இவர்களைத் தடுத்து வைத்திருக்கின்றான் என்று எனக்கெப்படி தெரியும்? திரைக்கப்பாலும், இவர்களைப் பார்க்க நான்தான் மறுக்கின்றேன் என்று காரணம் சொல்லியிருக்கக்கூடிய ஆள்"....கடவுள் விக்கித்துப்போய் முகமும் மூளையும் விறைத்து நிற்க,

கூட்டம், "அடிப்பொடி, நீ சொல்வது சரிதான்" என்று கத்தியது....

கடவுள் தனக்குத்தானே சட்டத்தரணியானார்; இயலுமானவரை குரலை உயர்த்தினார்.

"அடிப்பொடி; துரோகி. காலகாலங்களுக்கு முன்னர், என்னைப் படைத்த ஒவ்வொரு மனிதனையும் நானே சென்று கண்டு குற்றம்குறை கேட்டு, அவலம் போக்கினேன். அப்போதெல்லாம், மனிதர்கள் இவர்களைப் போலவே நொய்யெலும்பும் மேற்போர்த்திய மென்றோலாகவும் இருந்தார்கள். உனக்கே தெரியும். அன்னையின் சுருங்கிய மார்பை பாலுக்காய் இழுத்து வதைத்துக்கொண்டிருந்த உன்னைக்கூட நான் அங்கேதான் கண்டுபிடித்து எடுத்துப்போனேன். உன்னை என் எடுபிடியாக்க, காலத்தோடு ஒருமிக்க ஒரு முழுமாட்டூன் தின்ற புழுவாய் உடல் கொழுத்துக்கொண்டு வந்தாய்.என் உடலின் பெருப்பம் உயிருக்காகாதென்று சொல்லி, என் வெண்ணையையும் வெத்திலையையும் கண்டம் கையழுத்தி நிறுத்தியவன் நீ. பின்னர், என் பவனிப்பல்லக்குக்கும் உலகுக்குமிடையே அரசுப்பெண்டிர் அந்தப்புரங்கள்போல மூடுதிரை போட்டவன் நீ. கேட்க, தீரா என் தொழிலிருந்து எனக்கு சிறிது ஓய்வெடுத்துக்கொள்ள வழி செய்கின்றதாகச் சொன்னாய். என் மீதிருக்கும் இரக்கத்திலே, உன்னை ஓயாமற் சுற்றி என் நலம் பார்க்கின்றாய் என்று எண்ணிப் பெருமிதமடைந்து சொன்னபோதெல்லாம், புன்சிரிப்புச் சிந்தினாய். பின்னர், என்னைக் காண வந்தோரெல்லாம் பலிக்கிட விளைத்த ஆட்டுக்குட்டிகளாக இருந்தார்கள்; மக்களின் வாழ்க்கை நிலை வளம் பெற்றதாக எண்ணிக்கொண்டு மகிழ்ந்தேன்..." - கடவுள் மூச்சுக்குக் கணம் தரிக்க, அடிப்பொடி உள்ளே பாய்ந்தான்...

"பார்த்தீர்களா? இவன் கடவுளாக இருந்தாற்கூட, எவர்களின் சகவாசத்தை இவன் எப்போதும் பெற்று அருள் பாலித்திருக்கின்றான் என்று...அவர்களினது.... சேற்றுப்பன்றிகளாய்க் கொழுத்த அவர்களினது... உங்களை ஏன் கடவுள் என்று சொல்லிக்கொள்ளும் இவன் கண்டு கொள்ளாததற்குக் காரணம், தினமும் கிடார நெய்யும் பெட்டி ரொட்டிகளுக்கும் தேவைக்கதிமாகத் திணித்துக்கொள்ளும் முள்ளுப்பலாப்பழங்கள் அவர்களாம்..."

"இவற்றைச் சொல்லும் இவன்தான் கடவுளென்றால், இரண்டு முறை கொல்லு அவனை" -கூட்டத்திலேயிருந்து ஒரு நோஞ்சான் ஒரு கூழாங்கல்லை எடுத்து தன்னால் ஆகுமென்ற தொலைவுக்குக் கடவுளை நோக்கி எறிந்தான். அவரின் காலடியிலே வந்து வீழ்ந்தது.

"நில்லுங்கள்; நில்லுங்கள்; இதையும் கேளுங்கள்; என்னைப் பற்றிய முழுவிபரம் தெரியும் தெளிவாகும். பின்னால், நீங்கள் என்னைத் தேடி வந்தபோது என்னை ஏன் காணமுடியவில்லை என்பதையும் கேளுங்கள். அந்தப் பன்றிக்குட்டிகளின் தொல்லை தாங்கமுடியவில்லை; எப்போதும் 'இதைத்தா அதைத்தா' என்ற ஓயா நச்சரிப்பு. தேவைக்கதிகமான நச்சரிப்பு. கிடையாதவிடத்து, வசை. இவனிடம் நிறுத்து என்று சொன்னால், கேட்பவருக்குக் கொடுப்பதே கடவுளின் கடமையென்றான். அதனால், எனது உண்மையான இருப்பின் நோக்கையும் அவர்களுக்கு நியாயமான தேவைகள் எவையென்று தெரிவதற்குமாகவே ஒளிவிடம் தேடி ஓடினேன். இல்லாவிடத்துத்தான், என் அருமை தெரியும் என்று ஓடினேன்.."

சிலுவைகளடுத்த மலைத்தொடரெல்லாம் அதிர்ந்து எதிரொலிக்க உரக்கச்சிரித்தான் அடிப்பொடி; நிறுத்தமுடியாமலே, சிரித்தானாம்; ஆத்திரமும் பொசுக்கிப்பொசுக்கிச் சிரித்தானாம். மக்கள் கற்களை எடுத்துக் கடவுளின் கண், கன்னம், கழுத்து, முகம், முண்டம், மூக்கு, எல்லாவிடமும் எறிகணைத்தடம் பதிக்கப்பதிக்க எறிய எறிய, எரிந்து சிரித்தானாம் ஆண்டவன் அடிப்பொடி.....

..." எவ்வளவுதான் உமக்குச் சலிப்பானாலும், தேவைகளைக் கேட்டு வரும்போது நிறைவேற்றக் கிடக்கிறன்றவன்தான் ஆண்டவன். இவர்கள் உம்மைப் படைத்தது தம் தலைக்கு மேலே ஓர் அந்தரத்தை ஆக்கி இருத்தியதே தம் தேவைகளைத் தலையுயர்த்தி உம்மிடம் சொல்லதான் என்றபோது, நீர் உமது கடமையை விட்டு ஒளிந்தோடினால், எப்படி? இப்படி ஓடியவர், இன்றைக்குக் கல்லடிக்கும் சிலுவைக்கும் பயந்து நீர்தான் கடவுளென்று உம்மிருப்பினையும் பதவியையும் நிலைப்படுத்த விழைவதும்கூட வெட்கமும் அருவருப்பும் நிறைந்தது"....

"அவனோடு என்ன பேச்சு? தூக்கிக்கட்டு அவனை; ஆணி நெற்றிமத்தியடித்து அவனைக் கொல்ல ஆணையிடு"

....."உமது வெண்ணையிலே ஊறிய அந்த விருந்தினர்கள்கூட உம்மைக் கைவிட்டார்கள் என்பதை அறியீரா? நீர் காணாமற்போனால், உமக்குப் பாதிப்பேயழிய அவர்களுக்கில்லை என்பதையும்தான் அறியீரோ?வெண்ணெய்க்கும் வெத்திலைக்கும் நீர்தான் நீர் சொல்லும் கடவுளென்றாலும், நீர் மட்டுமல்ல ஏக மொத்த விற்பனையாளன்....உமது மூடுபல்லக்குப் போகாத சேரித்தெருமூலைகளில் உம்முடையதுபோல எத்தனையோ கீரைக்கடைக்கடைகளிருந்ததை அறியாத நீரெல்லாம் கடவுளாயிருந்தீர் என்று சொல்லிக்கொள்வது வெற்றியான வரம் கொடுக்கும் வியாபாரம் நடத்தும் தெய்வங்கள் பெயர்களுக்கு இழுக்காகும்"..... மிகைநக்கல், நா மிதக்கச் சொன்னான் அடிப்பொடி...

கடவுளுக்குக் கல்லாயோ வெள்ளைச்சுவராயோ மட்டும் இருப்பதிலே தொக்கி நின்ற நட்டம் மெள்ளமெள்ள விரியத்தொடங்குகையிலே, கூட்டம் பொறுமையிழந்து ஆர்ப்பரித்து ஆவேசத்துடன் கத்தியது;

"முடிவாகச் சொல்கின்றோம்: விளக்கமும் விவரிப்பும் இத்துடன் நிற்கட்டும்...... இவன் பொய்யனோ, பொருந்தாதவனோ, அதற்கான குற்றத்தண்டனையைப் பற்றிமட்டும் இனிப் பேசு."

"சரி; மக்கள் விருப்பம் அப்படியானால், உங்களிலொருவனும் உங்கள் சேவகனுமான எனக்கேதும் ஆட்சேபணையிருக்கப்போவதில்லை; ஆனால், எந்தக்குற்றத்துக்கும் பகிரங்கவிசாரணை நடத்தியபின்னரே தீர்ப்பு வழங்குவது, ஜனநாயகம்; இந்நீதி தெய்வநிந்தை, நிந்தைத்தெய்வத்துக்கும் சேர்ந்ததே; அதன் வழியே செயற்பட்டேன். ஆக, மற்றச்சிலுவைப்போலிகள் போலவே இவன் குற்றமும் நிரூபணமாகிறது; இத்தகு குற்றங்களுக்கு நான் மூன்று விதமான தீர்ப்புகளை வைத்திருக்கின்றேன். அதிலே, இவனின் குற்றத்தின் ஆழத்தைச் சீர்தூக்கிப்பார்த்து, மக்கள் நீங்கள்தான் நடுவர்களாகத் தீர்ப்புச் சொல்லவேண்டும். உங்களைப் பாதித்தவனுக்கான தீர்ப்பு உங்களிடமிருந்தே வரவேண்டும்" - கூட்டத்தைப் பார்த்து அடிப்பொடி இடது ஆட்காட்டி விரலை உயர்த்திக் காற்றிலே அடித்தடித்துப் பேச, கூட்டம், "அப்படியே செய்தாற்போயிற்று; மாற்றுத்தீர்ப்புகளைக் கூறு; தீர்ப்புகளைக் கூறுஉஉ" என்று உயர்மீடிறனிலே அலறியது.

"ஒன்று, இவன் தான் படைத்த மக்களின் நலத்தினைச் சிந்தை வைக்காத கடவுளென்றால், தன் குற்றத்தை ஏற்றுக்கொள்ளுமிடத்து, கூட்டத்தோடு இன்னொரு ஆளாக ஏற்றுக்கொள்வோம். தான், இனித் தனியே திரைபோட்டு வாழாது கூட்டத்தோடு கூட்டமாகவிருந்து தனது கடமையைச் செய்யலாம்; அல்லது, கூட்டம் அவன் தனது மேம்பட்ட தன்மையை விலக்க, கூட்டம் போலவே தனது வாழ்க்கையினையும் சமநிலையிலேயிருந்து நடத்தவேண்டும்; இல்லையேல், இவன் கடவுள் இல்லை என்றால், இந்தப்பெரும்பொய்மைத்தனமும் தெய்வமாறாட்டமும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாதவை; சிலுவையிலே அறையப்பட்டேயாகவேண்டும்."

"இதிலே நீ எந்தக்குற்றத்தை உனதென்று இறுதியாகச் சொல்கின்றாய்?" -கடவுளைப் பார்த்துக் கத்தினான்.

கடவுள் வாய்விட்டு அலறினார்; "பாவி, இவர்களைத் திரைக்குப் பின்னால் மறைத்தவன் நீயில்லையா? இப்போது, என் தலையிலே கருங்கல், நெற்றியில் இரும்பாணியா?"

"பார்த்தீர்களா? உண்மையைச் சொன்னதற்காகக் கடைசியிலே என் தலையிலே தன்னோர் அம்பெய்கிறான்" -அடிப்பொடி மனம் பொடிபட்டானாம் என்று சொன்னது அவன் முகம்.

"சிலுவையிலே அறை" என்றது கூட்டம்.

கடவுள் அடுத்த வசனம் பேசமுன் வாயமுக்கி, வலுக்கட்டாயமாகத் தூக்கப்பட்டார்; அலறமுன் ஆணி அவர் நெத்தியிலே தைத்தது

காட்சி முடிந்த கூட்டம் விலகமுன்னர் அடிப்பொடி கேட்டான்;
"எமது முதலாவது போலிகளை இனங்கண்டு களை கில்லும் பணி இனிதே முடிந்தது; அடுத்ததாக, உண்மைக்கடவுள் எங்கோ தொலைந்துபோனதால், அவர் வரும்வரை தற்காலிகமாகவேனும், எமது வருங்காலத்துக்காக ஒரு கடவுளை உருவாக்கவேண்டும். அந்தக்கடவுள் காணாமற்போன கடவுள் போல, இருக்கும்போது காக்கும்பொறுப்பைக் காட்டாமலும் தொலையும்போதும் பொறுப்பாகச் சொல்லிப்போகாமலும் அமைபவனாகவிருக்கக்கூடாது. என்ன சொல்கின்றீர்கள்?"

கூட்டம், "நீயே இரு! உனக்குத்தான் காணாமற்போன கடவுளுடன் இருந்து கடவுளாகவிருத்தல் பற்றிய அனுபவம் நிறையவுண்டு" என்று முடிவாகச் சொல்லி, "எல்லாம் அறிந்து எம்மைக் காக்கும் மனமும் வல்லமையும் வாய்ந்த எமது புதுக்கடவுள் வாழ்க" என்று கோஷமிட்டது.

பழைய கடவுள் இந்தக்கோரிக்கையும் குழுமுடிவும் கோஷமும் கேட்காமலே நெத்தியிலும் உள்ளங்கையிரண்டு இரத்தம் ஒழுக ஒழுக தனது இருப்பிடத்திசையும் இறுதியில் நோக்கவும் முடியாமல், தலை தொங்கச் செத்துப்போனார். இறக்கும்போது, தன்னால் இறக்கடிப்பட்டவர்களையும் தான் அடிப்பொடியாக இருக்கையிலே பதவிக்கு வரக் கொன்ற கடவுளையும் நினைத்துக்கொண்டார்;

"எந்த சிலுவையிலே அந்தக்கடவுளை ஏற்றினேன்?? இங்கே சிலுவைகளிலே ஏற்றப்பட்டிருக்கின்றவர்களிலே நான் ஏற்றியவர்கள் எத்தனைபேர்??"

கூட்டம், "செத்த போலி வீழ்க! புதிய கடவுள் வாழ்க!!" என்று புதுக்கடவுளுடன் தீவட்டி வெளிச்சத்திலே பஜனை பாடிக்கொண்டு சாமரம் வீசிக்கொண்டு நகர்ந்தது; புதுக்கடவுள் தனது புது கையுதவி அடிப்பொடியிடம் தின்ன வெத்திலை மடிக்கவும் பருகப் பால் காய்ச்சவும் மறக்காமற் சொல்லிக்கொண்டு பல்லக்கு மூடுதிரைக்குள்ளே முகத்தை மூடிக்கொண்டு போனார். புதுப்பொடிக்கையாள், குழைவுடன் ஆமோதித்தபடி தனக்கான குறிப்புகளை எடுத்துக்கொண்டு திரைக்கு உள்ளும் புறமும் தலையை மாற்றி மாற்றி மர ஓணான் விளையாட்டுக்காட்டிக்கொண்டு அவர் கூடவே போனான். கடவுள் கூட்டத்தின் கோஷத்துக்குப் புன்னகைத்து,கைகாட்டி, தலையசைத்தாலும், தன் வேலைக்காரனின் தொட்டாட்டு வேலைகளின்போதான ஒவ்வொரு அசைவையும்கூடத் துல்லியமாக அவதானித்துக்கொள்வதே குறியானார்.

~01, மார்ச் '01 - ~07, மார்ச் '02

"கும்பகர்ணன் விட்ட கடைசிக்குசுவெனக் கொள் என்னை"


அன்றலர்ந்த ஆச்சா மரம் போல வீழ்ந்தானோ அவன்!
போச்சா, உள்ளிழு மூச்சு விடுவெளிமுன்னே
வீச்சாய்ச் செல்களம் மாறி
ஒளிந்திருந்தம்பெய்வான் பாதம்
இன்றே போய் நன்றே புக்கிப்
புலம் தொழுது வாழ் புல்லர்.

மல்லாக்காய் வீழ்ந்து மாண்டான் மாநிலவேந்தன்
இராவணன் இல்லாத்தலையையும் முள்கோலிக் கொய்து
தம்படி செப்படிவித்தை செல்லுபடியாக்கும்
பொல்லாவிபீஷணர் சுருக்குவால்களிலே
வல்லான் என்னான் கல்லாலனைக் கொல்
தர்மம் எல்லாம் நியாயமென்றோதிப் பறக்கிறது
இரவினும் பகலிலும் எல்லாப்பொழுதிலும்
கிழியக் கட்டிய இரவற்பீதாம்பரம்.

பெருகு தாரை உருகிச் சபித்த இராமன்கள்ளேறு
ஆண்குறிதன் அடிமுடி சவரம் செய்யப் பெருகுவது,
மாரீசத்தூதுவேடத்தே வெஞ்சினமாய்
தம்போக்குவாழாளையும் அழுகுழவியையும்
எல்லாம் சமமென்று தீயேற்றிக் கழி
இலங்கா(த்)தகனத்து களிகொள் மாருதி வாலல்ல;
எதிர்வீடிரவு விபீஷணர்தம் சொற்சிற்பத்துச்சிப்பம்.
இழவெடுவில்லத்தே இருப்புக்காய்
ஏற்றுக்கொண்ட இராமகீதங்களை,
கால் சுற்றிவளைக்கடி க்ருதிகளை
கருணை கொள் கசட்டுநிதிதரு
வல்லோர் எல்லாம் நல்லோரென்று
எனக்குப் புகட்டமுன்னே,
இதைச்
சொல்வேன் கேளும்:

"வாய்க்கால் சிவந்த முள்ளுக்களமேனும்
கால்வாய் கடந்திழியும் பனிநிலப்புலமேனும்
பிறழாச்சொல்நீதி பொருந்தாச் செய்கடமை
கொல்லப்புல்தின்ற கும்பகர்ணன் விட்ட
கடைசிக்குசுவெனக் கொள்ல்க என்னை.

அவப்பொழுதே
மணத்திருப்பேன்
நும்மூக்கில்"

மே/12/2010-புதன்.