தளைப்பட்டால் தலைவன் தாழ்வே

Thursday, May 20, 2010

"Robespierre was guillotined without trial in the Place de la Révolution. His brother Augustin, Couthon, Saint-Just, Hanriot and twelve other followers, among them the cobbler Simon, were also executed. Only Robespierre was guillotined face-up. When clearing Robespierre's neck the executioner tore off the bandage that was holding his shattered jaw in place, producing an agonising scream until the fall of the blade silenced him."
- Wikipedia on Maximilien Robespierre.

வேலைசெய்யுமிடத்திலே தலைமைத்துவம் பற்றிப் பேச்சு வந்தது; அப்பொருளிலே ஆய்வாளர் ஒருவர் தலைவர்களின் வகைப்பாட்டினைப் பட்டியலிட்டார்; "மக்களை வழிநடத்தும் தலைவன்; மக்களால் வழிநடத்தப்படும் தலைவன்; மக்களைத் தன் வழிநடக்க ஆணையிடும் தலைவன்; இலட்சியங்களைக் குறிபார்த்து நடக்கும் தலைவன்; நடப்புக்கேற்பத் தான் வழிநடத்துகின்றவர்களின் இருப்பினைத் தக்கவைக்கும் தலைவன்...." தொடர்ந்து என்ன சொன்னார் என்பதிலே கவனம் சிதறிவிட்டது; ஆராய்ச்சிக்கு இதுவெல்லாம் தேவையாகவிருக்கக்கூடும், ஆனால், நடைமுறைக்கு மிக எளிதான ஒரு கூறிடலே தலைமைத்துவத்தை வரையறுக்கப்போதுமென்று தோன்றியது:

தலைவன் (தலைவி) & தலைவர்.

தலைவர் என்ற சொல்லை, சாதாரணமாக, சுரணையிலாமலே முன்பக்கப்பத்திரிகைச்செய்திகளிலும் முக்கியவானொலிச்செய்திகளிலும் எழுவாயாக உள்வாங்கினேன் - எறும்பூர்வது போன்ற உணர்வுகூட இல்லாமல்; கூட்டுறவுச்சங்கத்தலைவர், சுதந்திரப்போராட்டத்தலைவர், கூட்டணித்தலைவர். ஒரு சம்பிரதாயத்துக்காக, உத்தியோகபூர்வ மரியாதையை வேண்டி அந்நியமாக எட்டிநிற்கின்ற சொல், தலைவர். "நிர்வாணமாக ஊர்வலம் போகின்றபோதும், பட்டாடையோடு பவனி வருகின்றார்" என்று பரணி பாடக் கேட்கின்றவர், 'தலைவர்'.

ஆனால், தலைவன் என்பது வேறான தொனியிலும் தோரணையிலும் வருவது. எம்ஜிஆரின் படத்தலைப்பாகவோ, கல்கியின் சிவகாமியின் சபதத்திலோ பார்த்திபன் கனவிலோ சிவகாமி ஆடும் நாவுக்கரசர் பாடலாகவோ அறிமுகமாகி, சங்கப்பாடல்களின் விளக்கவுரைகளிலே என்னுள்ளே விரிந்தவன், தலைவன். சம்பிரதாயத்தை விலக்கியும் கூம்புப்படிநிலை மறுத்தும் அணுக்கத்தன்மையோடு தொட்டு ஒட்டி நெருங்கிச் செல்லும் பதம், 'தலைவன்'; குழுமத்துக்குப் பாட்டுடைத்தலைவனாகவிருந்தாலுங்கூடப் பின் தொடர்கின்றவரை கண்ணப்பநாயனார், எறிபத்தநாயனார் போன்ற முரட்டுத்தொண்டர்களாக அன்பின் நெருக்கத்திலே இயங்கச்செய்பவன்; தம்மோடு பொருந்தாதென்கிறபோது, "தலைவா, உன் தலைக்கு இந்த சிலுப்பா டோப்பா பொருந்தவில்லையே! அடுத்த படத்திலே மாற்று" என்று கலரி_கதிரையிலிருந்து சீழ்க்கையை மறுத்துக்கூவச்செய்வபன் தலைவன்.

"மக்களாலே வழிநடத்தப்படும் தலைவன்தான் மக்களை வழிநடத்தும் தலைவனாக இருக்கிறான்" என்கிறேன்; ஆய்வாளநண்பர், "இல்லை, இரண்டும் வேறுவேறு; மோசஸ் மக்களை வழிநடத்திய தலைவன்; உரோபேஸ்பியர் மக்களால் வழிநடத்தப்பட்ட தலைவன்" என்கிறார். "அடப்பாவிகளே மக்களால் வழிநடத்தப்பட்டவன் என்ற புரட்சிக்காரனை அவன் பயன்படுத்திய கில்லட்டினுக்கே அனுப்பிவிட்டு, மக்களை மந்தைகளாக வைத்துப் பார்த்துத் தன் செய்கைகளுக்குக் காரணம் சொல்லவேண்டுமென்ற அடிப்படைத்தார்மீகமுமில்லாற் கூட்டிச்சென்றவனைக் கும்பிடும் சமூகமடா நீங்களெல்லாம்!" என்று வழக்கம்போலக் குதர்க்கமாக நாக்கிலே சரசுசதி எம்பினாள்; அமுக்கிவிட்டேன். "ஆமி அடம்பனுக்குள்ளை உடைச்சுக்கொண்டு வெளிக்கிட்டான்" என்று தொடங்கும் வார இறுதிகளின் ஒன்றுகூடலின் பேச்சுகளை, "தலைவர் அதுக்கு ஒரு பிளான் வைச்சிருப்பார்" என்ற ஒருவரி நெம்புகோலோடு தலைவர் முதுகிலே சுமையை நகர்த்திவிடும் மக்கள்தான் கேள்வியையே கேட்கவில்லையே, கேட்கவிரும்பவில்லையே, பிறகு மோசஸைப் பார்த்து இம்மக்களை மந்தையாக நடத்தினாயேயென்று குறைசொல்லி என்ன பயன்! ஒரு மக்கள்புரட்சியையே முன்னின்று நடாத்தி அரசன் பதினாலாம் உலூயியினையும் ஒஸ்ரியாவிலிருந்து வந்தேறு அரசி மரியேட் அந்தோனியேட்டினையும் ஊதாரி அரசினையும் கவிழ்த்த உரோபேஸ்பியரை எல்லோரிலும் சந்தேகம் கொள்ளவைத்துக் கடைசியிலே அதே கில்லட்டினுக்கு அனுப்பியதிலே அவன் கவிழ்த்த அரசுக்கு எத்துணை சம்பந்தமிருக்கிறதென்று வரலாறு தெளிவாகப் பேசவில்லை; ஆனால், தலைவன் உரோபேஸ்பியரை, தலைவர் உரோபேஸ்பியர் எல்லாவற்றையும் செய்வாரென்று விட்டுவிட்டு, தத்தமது வேலையைப் பார்க்கப்போன மக்களுக்குப் பெரிய பங்கிருக்கின்றது எனச் சொல்லலாம்.

உரோபேஸ்பியர் ஒரு சிறந்த தலைவன்; ஆனாலும், அவனும் தனிமனிதன்; அவனின் வல்லமைக்கும் எல்லையுண்டு; புறக்காரணிகளும் கைவசப்படாத்தருணங்களும் அவனை மீறியவை; ஆட்சிக்கட்டிலே தலைவராக மாற்றி ஏற்றிவிட்டு எல்லாவற்றையும் அவரே செய்வாரென்று தன் நாளாந்த காய் உரொட்டிக்காயும் குவளைக்குடிநீருக்காகவும் நகர்ந்த ஒரு பெருங்கும்பலுண்டு. இதைத் தவறென்று சொல்லமுடியவில்லை; எந்நேரமும் கத்திக்கூர்மையாக இருக்காத புரட்சியிலே மக்கள் தனிமனிதத்தீவாகவே சொந்தத்தேடுதலிலே சுழலமுடியும்; இயல்பு இதுதான். ஆயினும், இதன் விலையாக, இறுதியில் வரப்போகும் உலகத்தின் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையையும் ஏதோவிதத்திலே மேம்பட உதவிய முன்னோடிப்புரட்சியைச் செய்தவன் வரலாற்றிலே அவனின் சுருக்கமான இறுதிக்காலகட்டத்துக்காக வன்மையாகவே வரையப்பட்டுப் போகிறான். இரு பெரும் நகரங்களிலே அணுக்குண்டுகளைப் போட்டுக் கொல்ல அனுமதி கொடுத்த ஆட்சித்தலைவரும் "ஆலமரம் வீழ்ந்தால் நாணற்புற்கள் நசியுண்டு சாகத்தான் செய்யும்" என்று தோளை ஒரு முறை குலுக்கிவிட்டுப்போன ஆட்சித்தலைவரையும் மக்கள்புரட்சியின்பேரிலே பனிக்காட்டுவதைமுகாம்களுக்கு அனுப்பிக்கொன்ற ஆட்சித்தலைவரையும்விடவா, வரலாறு உரோபேஸ்பியரை மோசமாக எழுதவேண்டும்! வரலாறு என்பது எழுதுகின்றவரின் பார்வையைப் பொறுத்ததாலே விட்டுவிடலாம்.

ஆனாலும், இதுவொன்றும் உரோபோஸ்பியர் எக்குற்றத்தினையும் தவறினையும் இழைக்கவில்லையென்பதாகச் சொல்வதாகாது. அத்தலைவனிடம் "மக்கள் நலம் மக்கள் நலம் என்று சொல்லுவார்; தம்மக்கள் நலம் ஒன்றேதான் மனதிற் கொள்ளுவார்" என்றிருக்காததுட்பட எத்தனையோ தலைவர்களிலே இருக்காத புல்லமை தவிர்த்த பெருங்குணங்களிருந்தன. ஆனால், மக்கள்தலைவனிலிருந்து தேசியத்தலைவராகத் தள்ளிவிட்டு விளையாட்டுப் பார்க்கும் விபரீதத்தைப் புரிந்துகொள்ளாமல், அந்த 'தலைவன் | தலைவர்' இலட்சுமணக்கோட்டைக் கடந்த பேதமையும் கிடந்தது. அக்கத்திக்கோட்டினை உணர்ந்து கொள்ளும் தன்மையிருந்திருப்பின், தலைவர் என்று ஏற்றிவிட்டதின் பெயரிலே நிகழ்ந்த மக்களுக்கெதிரான ஒவ்வொரு கொடூரத்தினையும் தானே தான் செய்ததாகச் சுமந்துபோகவேண்டிய அவலம் ஏற்பட்டிருக்காது.

ஆனால், நெடுங்காலநோக்கிலே ஒருவன் தலைவனாயிருந்தானா அல்லது தலைவராகத்தானிருந்தானா என்று நிறுவுவது, அவனின் இருப்பல்ல, இறப்புத்தான் என்றுதான் சொல்லத்தோன்றுகின்றது. "அடுத்து என்ன செய்யப்போகின்றோம்" என்று தெரியாத குழப்பத்திலும் கேள்வியிலும் காலச்சுவரிலே ஆணியடித்துத் தொங்க மக்கள் நிற்கும்போது, ஓயாது பல்முளைத்து நன்னும் ஒவ்வொரு சுண்டெலியும் தலைமை நானென்று செய்கைப்பட்டியலாலே ஆசனத்தைக் கோரும் நிலையிலேதான், 'இதை நான் செய்தேன்' என்று சொல்லிக்காட்டாமலே மக்களை வழிநடத்தின, மக்களால் வழிநடத்தப்பட்ட அவன் தலைவனென நிறுவப்படுவது முழுமையடைகின்றது. தனக்கெனத் தன் ஆட்சியின் பின்னாலே வர ஒருவனைப் பழக்கப்படுத்தி வைக்காதுபோகின்றவனை எப்படி தலைவன் எனலாம் என்ற கேள்வி எழுப்புகின்றவர்கள் உள்ளனர்; கட்சியை வழிப்படுத்த வாரிசினைத் தலையணையும் மெத்தையும் கவசமும் கட்டி வளையத்துக்குள்ளேவிட்டுப் பழக்கப்படுத்துதல்கூட ஜனநாயகமற்றது; இந்நிலையிலே, மக்களை வழிநடத்த வாரிசையோ வாரிசுகளையோ வரிசைப்படுத்துப் போவது, வேண்டுமானால், அரசியலிலே ஒரு தலைவருக்கு அத்தியாவசியமானதாகலாம் - கௌரவப்பட்டங்கள், பெருவிழாக்கள்போல; ஆனால், ஒரு முறையான தலைவன் எந்நிலையிலும் மக்களையே தமக்குப் பொருந்தின அடுத்த தலைவனைத் தேர்ந்தெடுத்து வழிகாட்ட வழிநடத்தமுடியுமென்று விட்டுச்செல்வான்; இப்படியாக, 'இல்லா வெறுமை' உணரப்பட்டு, மக்களே தமக்கான அடுத்த தலைவனுக்கு வழிகாட்டி வழிநடத்தப்படும் நிலையிலேயே தலைவன் உருவாகுகிறான். அவன், களியைப் பிசைந்து வனைந்து மெருகிட உருவாகுகிறவன். தலைவனின் எல்லை இலட்சுமணக்கோட்டைத் தாண்டிக் கெடுகின்றவர் தலைவர். சரிகின்றபோது, தலைவன், மக்கள் உள்ளேயிருந்து ஒன்றைத் தன்னோடு பிய்த்துக்கொண்டே சரிகின்றான்; தலைவர், ஆட்சிப்பீடத்தைப் பிரித்துக்கொள்ளவும் பிய்த்துக்கொள்ளவும் பிள்ளைகளையோ பேய்களையோ விட்டுப்போகிறார்.

இத்தனையும் சொன்னபின்னால், உரோபேஸ்பியர் கில்லட்டிலினிலே போனபோது, 'தலைவனாகப் போனானா? தலைவராகப் போனாரா?' என்று கேட்டால், சொல்லக்கூடியது ஒரே பதில், 'அது கேட்பவருக்கு உரோபேஸ்பியர் என்ற தனிமனிதனைப் பற்றி இருக்கும் தனிப்பட்ட கருத்தினைப் பொறுத்தாகின்றது'.

இப்படியான சிதறின கருத்தோட்டங்களையெல்லாம் முறைப்படி கற்று ஆயும் நண்பருக்குச் சொல்லமுடியவில்லை; தமிழிலிருந்து இற்றைநாள் ஆங்கிலத்துக்கான மொழிபெயர்ப்பிலே உதிர்ந்துபோவது, தலைவனுக்கும் தலைவருக்குமான வேறுபாடு. மேலும், கொட்டிக்கிடக்கும் செய்திகளிலிருந்து இரைச்சல் களைந்து அடிப்படையிலே எளிதான விடயங்களைப் பிரித்தெடுத்துச் சொல்வதுதான் கடினமானகாரியம்.


For some he was the 'The Incorruptible', and
for the others, there was a 'dictateur sanguinaire'.....
but none can deny there reigned an indisputable unique leader
who would force the future historians quote our '
Anno Domini'.


அடிப்படைப்படம் நன்றி:
http://en.wikipedia.org/wiki/File:Robespierre.jpg

3 comments:

Anonymous said...

எல்லா சந்தர்ப்பங்களுகும் பொருந்தும் உண்மை
- சந்திரா

அரசு said...

சீரிய தலைவர்களை உருவாக்க, உருவான தலைமையின்மேல் அய்யப்பாடு இருப்பின் நீக்க, பக்குவமும் ஆற்றலும் ஒரு சமுதாயம் பெறுவதே, சமுதாய வளர்ச்சிக்கு முக்கிய அடையாளம்.

இரும்புப் பெண்மணியாக பிரிட்டனின் நிகரற்ற தலைவராக இருந்த மார்கரெட் தாட்சர் சர்வாதிகாரப்போக்கில் போவதாகக்கருதிய அவரது கட்சியே அவரைக் கழற்றிவிட்டது. ஜனநாயகத்தின் மூலமே ஆட்சியைப்பிடித்து உலகையே போரின் கோரப்பிடியில் தள்ளிய ஹிட்லர் உருவான ஜெர்மனியில், நிதானமும் ஆற்றலும் நிரம்பிய ஆஞ்செலா மெர்க்கல் ஆட்சிப்பொறுப்பேற்றிருக்கிறார்.

தமிழ்ச்சமுதாயம் குழம்பிக்கிடக்கும் இக்காலகட்டத்தில் மிக முக்கிய பதிவினை வெளியிட்டிருக்கிறீர்கள்.

- அரசு

Unknown said...

best of the lot.