புலம்பெயர்தமிழர்களின்மீதான கல்

Monday, May 17, 2010

கடந்த ஓராண்டாக வாசித்த ஈழம் தொடர்பான கட்டுரைகளும் எதிர்வினைகளும் விடுதலைப்புலிகளின் இராணுவத்தோல்விக்குப் பின்னாலான, ஈழத்தமிழர் & புலம்பெயர்தமிழர்களின் இருப்பினையும் எதிர்காலத்தினையும் மையப்படுத்திப் பல விவாதப்புள்ளிகளைத் தொடுகின்றன. கட்டுரைகளை வாசிக்கும்போது எழும் எண்ணங்களைத் தெளிவாகச் சொல்லமுடியாத உணர்வும், இதுவரை நாள் சொல்லி எதனைச் சாதித்தோமென்ற ஆயாசமுமே முடிவிலே எஞ்சும். இன்றும் இவ்விவாதப்புள்ளிகளிலே பலவற்றினைப் பேசுவதற்கான பொருத்தமான களமும் கணமும், மேலாக, எஞ்சியிருக்கும் குற்றம் களைந்த தெளிவும் தகுதியும் எனதாகி வரவில்லையென்றே சொல்வேன். ஆனால், புலம்பெயர்ந்த ஈழம் சார்பான தமிழர்கள் என்ன செய்யவேண்டுமென்பதிலே ஓரளவு தெளிவு புலம்பெயர்ந்தவனாக உண்டு.

இக்காலகட்டத்திலே புலம்பெயர்-ஈழத்தமிழர்களாலே எதையுமே பெரிதாகச் சாதிக்கமுடியாதென்ற தொனியிலே அகில நெருக்கடி (ஆய்)குழு (International Crisis Group) மாசி மாதத்திலே அறிக்கை வெளியிட்டிருந்தது. இதற்கான ஆய்வுகளைக் களத்திலும் புலத்திலும் எவ்விதமான அரசியற்பின்புலமுள்ளவர்கள் செய்தார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், இஃது ஓரளவுக்குச் சோர்வினை ஏற்படுத்தும்விதத்திலே ஒரு பக்கச்சார்பாகத் தொகுக்கப்பட்ட அறிக்கையாகத் தோன்றியது. இவ்வாரம் வெளியாகும் இக்குழுவின் "வன்னியிலே கடந்த ஆண்டு நடந்ததவை" மீதான அறிக்கை புலம்பெயர்-ஈழச்சார்பான தமிழர்கள் சோர்வின்றிப் புலம்பெயர் அரசியலிலே உழைக்கவேண்டியதற்கான காரணக்கூறுகளைக் காட்டுகிறது.

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கு வரைவிலக்கணம் கொடுப்பதென்பது தண்ணீருக்கு வரைவிலக்கணம் தருவதுபோல - எடுக்கிறவர் குடுவைக்கும் வெப்பத்துக்குமேற்ப வடிவமும் பண்புகளும் வரையறுக்கப்படுகின்றன. ஆளாளுக்கான அரசியலின் தேவைக்கேற்ப வசதிப்படும் இந்த வரையறுப்பு (அல்லது அப்படியொன்று அற்ற தன்மை) அண்மையிலே ஸ்ரீலங்கா அரசினாலே இரண்டு அதீதங்களிலே பயன்படுத்தப்படுவதைக் காணலாம். ஓர் அதீதப்புள்ளியிலே, விடுதலைப்புலிகளின் எச்சமாக, நாடுகடந்த அரசாங்கத்தை அமைக்க புலம்பெயர் ஈழத்தமிழர்கள் முயல்வதாகவும் அவர்கள் 'ஸ்ரீலங்கா'விலே வாழும் தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லையென்றும் அவர்களைப் பயங்கரவாதிகளென்று தடைசெய்யவேண்டுமென்றும் மேற்கின் அரசுகளிடம் ஸ்ரீலங்கா அரசு கேட்கிறது; மறு அதீதப்புள்ளியிலே கொழும்பிலிருந்து கொண்டு தனக்குச் சார்பான, தன் செய்கைகளை ஆதரிக்கும் srilankan tamil diaspora என்று (தான் திட்டமிட்டு அடையாளப்படுத்தும்) புலம்பெயர்தமிழர்களுடன் நாட்டைக் கட்டியெழுப்பப் பேசிவருகின்றோமென்று அறிக்கையை விடச் செய்கின்றது. இப்படியான பாயத்தன்மை கொண்ட வரைவிலக்கணத்தினை எப்படியாக ஈழத்திலே வாழ்கின்றவர்களுக்கு, கடந்தகால இழப்புகளை ஈடு செய்யவும் நிகழ்காலத்தினைக் கட்டியெழுப்பவும் எதிர்காலத்தினை உறுதிசெய்யவும் பயன்படுத்தப்போகின்றோம் என்பதே புலம்பெயர்தமிழர்களுக்கு முன்னாலே நிற்கும் கேள்வி.

எதிர்பாராத விதத்திலே தாக்கும் இயற்கையின் பேரழிவுகளின் பின்னே எங்கிருந்து ஆரம்பிப்பதென்று குழப்பமும் கலக்கமும் கொண்டிருக்கும் ஹெயிட்டி போன்ற சிறுநாடொன்றினதினையும்விட மோசமான சிந்தை+உள+கையறுநிலைகள், புலம் பெயர்ந்தவர்கள், பெயராதவர்கள், அவர்களின் நலன்விரும்பிகள் ஆகியோரைச் சுற்றிக்கிடக்கின்றன. இயற்கையான பேரழிவின் பின்னேயாவது, புறத்திலிருந்து உதவிகளின், ஆலோசனைகளின் அடிப்படைகளிலே எதிர்காலத்தினைக் கட்டியெழுப்பமுடியலாம். ஆனால், எவர் நண்பர், எவர் எதிரிகள் என்று அறியாத நிலையிலேயும் உயிர்பிழைத்திருப்பதாலே ஏற்படும் குற்றவுணர்வோடும் கடந்த ஓராண்டாக இருக்கும் சமூகம் கொள்ளவேண்டிய தன்னம்பிக்கையும் தெரிவும் தெளிவும் போராட்டகுணமும் அதிகம். அரசியலளவிலான போராட்டமுன்னெடுப்போடு உளவியல்ரீதியிலான ஈழத்தமிழர்நலன்களுக்கு எதிரானவர்களின் தொடர்தாக்குதல்களையும், சமயங்களிலே புரிந்துகொள்ளாதவளவுக்குக் குழம்பிப் போயிருக்கும் நட்புச்சக்திகள் தரும் அழுத்தங்களையும் எதிர்கொள்ளவேண்டியிருக்கும். நடைமுறைக்குச் சாத்தியமான, இருக்கும் பலத்தின் எல்லைக்கப்பாற்பட்டு உடனடியே அகலக்கால் விரிக்காது இயங்கவேண்டிய சூழ்நிலையிலே வகுத்துக்கொண்ட நெறிகளிலும் நோக்குகளிலும் சமரசம் செய்து கொள்ளமுடியாத நிர்ப்பந்தமும் எமக்கிருக்கின்றது.

ஈழத்திலே போரினாலே பாதிக்கப்பட்டிருப்பவர்களின் இன்றைய நிலைக்கு ஏதோ புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களிலே கணிசமானவர்களும் அவர்களின் ஆதரவாளர்களுமே காரணம்போலவும், இத்தனை நடந்துமுடிந்துபின்னும் அப்புலம்பெயரிகளின் தொடர் நடவடிக்கைகளினாலேயே ஈழத்திலே தமிழர்கள் மேலும் பாதிக்கப்படுவதுபோலவும் வாதங்கள் மீண்டும் மீண்டும் சில தரப்புகளாலே எழுதப்படுகின்றது. இத்தரப்புகளிலே

1. ஸ்ரீலங்கா அரசு பின்னாலிருக்க, முன்னாலே பேசும் 'புலம்பெயர் தமிழ்ப்பேச்சாளர்கள்' உண்டு;

2. தம்மோடு ஒத்தியங்காக் கருத்துவெளிப்படும்போதெல்லாம் பின்னாலே விடுதலைப்புலிகளிருப்பதான காலாகாலத்துப்பேரச்சத்திலே எதிர்க்கும் புலம்பெயர் இடதுசாரி உதிரிகள் அடக்கம்;

3. விடுதலைப்புலிகளின் மக்களுக்கு எதிரானதெனச் சொல்லப்படும் இறுதிக்காலகட்டச்செயற்பாடுகளினாலே அதுவரைநாள் அவர்களுடனேயே இருந்து இடம்மாற்றிக்கொண்டவர்களின் புலம்பெயர்நண்பர்கள் அடக்கம்;

4. தம் இருப்பினைப் பிரதிபலிக்கும் தமிழ் இலக்கியவாதிகளும் புரட்சிவாடிகளும் இந்திய ஊடகங்களும் "ஸ்ரீலங்காவுக்குப் போய்ப் போராடுங்கள்" என்று சொல்லும் இந்தியத்தேசியத்தோடு புலம்பெயர்ந்தவர்களும் அடக்கம்;

5. மேலாக, 'வன்னிநிலத்தில் இறந்தவர்களின் பிணத்திலே பதாகை கட்டிப் பிழைக்கின்றார்கள்' என்ற வகையிலே புலம்பெயர்ந்த தமிழர்களின் போராட்டங்களைக் கொழும்பிலிருந்து விமர்சிப்பவர்களும் அடக்கம்.

இவர்களையெல்லாம் எதிர்கொண்டு முன்னே செல்லவேண்டிய கட்டாயமும் கடப்பாடும் காலத்தினாலே புலம்பெயர்-ஈழத்தமிழர்களுக்கிருக்கின்றது.

ஈழத்திலே இருப்பவர்களின் துயர் ஏதோவொரு வகையிலே -இரத்த உறவுகள், நட்புகள் முதலாகி, குறைந்தளவு சுரண்டிக்கொண்டிருக்கும் குற்றவுளப்பாங்கென்றளவிலேனுங்கூட- புலத்திலேயிருக்கும் அவர்களைச் சேர்ந்தாரை, அவர்கள் நலன்களோடு தம்மைச் சேர்த்திருப்பாரை, மற்ற எந்த அந்நியரையும்விடப் பாதித்துக்கொண்டிருக்கின்றது. அம்மக்களுக்கான துயரினைத் துடைப்பதிலும் எதிர்காலத்திலே அவர்களின் உரிமை நிச்சயப்படுத்தப்படுவதற்கும் குரலை எழுப்பவேண்டிய சுதந்திரத்தினை ஓரளவுக்கேனும் கொண்டிருப்பவர்கள் புலம்பெயர்ந்தவர்களே. அவர்களை ஈழமக்களுக்கு எதிரானவர்களென்பதாக எதிர்ச்சக்திகள் தூக்கிநிறுத்தி நிறுவமுயல்வது அத்தகு குரல் எழுப்பக்கூடிய சுதந்திரத்தோடு அவர்கள் இருப்பதாலேயே. அதனாலே, ஈழத்திலிருக்கும் மக்களின் இன்றைக்கான உடனடித்தேவைகளோடு எதிர்காலத்திலே அவர்கள் தமது சுயநிர்ணய உரிமை கொண்டிருக்கச் செயற்படவேண்டியதும் புலம்பெயர்ந்தவர்களின் கடனாகின்றது. நாடுகடந்த அரசென்று குரலெழுப்புவது எவ்வகையிலே ஈழத்திலேயிருப்பவர்களுக்கு எதிரான செயற்பாடாகின்றது? ஸ்ரீலங்காவும் இந்தியாவும் பலஸ்தீனியத்தின் நாடுகடந்த அரசினை ஆதரித்திருக்கின்றன; புலம்பெயர்ந்த இந்தியமேட்டுக்குடி போன நூற்றாண்டின் ஆரம்பத்திலே இலண்டனிலே இருந்து இந்திய சுதந்திரத்துக்கான கருத்துகளை முன்வைத்து எழுப்பியிருக்கின்றது. அப்படியான நிலையிலே எதற்காக, புலம்பெயர்ந்த தமிழர்களின் குரல்கள் அப்படியாக எழக்கூடாதென இவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்? அக்குரலினை எழுப்புவதொன்றும் இன்றைக்குச் சிறை அகதிகளாகவோ தமிழர்பூமியிலே தொடர்ந்தெழும்பும் சிங்களக்குடியேற்றங்களுக்குள்ளும் இருக்கின்றவர்களுக்கோ சமகால உதவியினை மறுத்துக்கொண்டு நிகழ்வதாக எதற்காக (& எவராலே) ஒரு தோற்றம் எழுப்பப்படுகின்றது? ஈழத்தமிழர்கள் பாதிக்கப்பட்டிருக்கும் இன்றைய சூழலிலே அவர்களுக்கான சமகால வசதிகள், எதிர்கால சுயநிர்ணய உரிமைகள் இருக்கப்படவேண்டுமென்று சொல்லும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் எதற்காக வலுக்கட்டாயமாகப் புலிகளின் பினாமிகள், எச்சசொச்சங்கள் என்ற வகையிலே முற்றிலும் ஆதாரமற்றும் முறையற்றும் குற்றஞ் சாட்டப்படுகின்றனர்? விடுதலைப்புலிகள் சென்ற பாதை தவறென்று கொண்டாலும், அதற்காகவும் அதன் விளைவாக இன்று மட்டப்பட்டிருக்கும் தமிழர்வாழ்க்கைக்காகவும் எதிர்காலத்திலே ஈழத்திலே தமிழர் தொடர்ந்தும் இப்படியேனும் இரண்டாம்நிலைமக்களாகவே வாழ்வது நியாயப்படுத்தப்படவேண்டுமா?

ஸ்ரீலங்கா அரசும், இந்திய அரசும் மேற்கரசுகளின் அறிக்கைகளும் "கடந்தவை கடந்தவையாகவே இருக்கட்டும்" என்றளவிலே நடந்ததையெல்லாம் குழியிட்டு மூடிப்புதைத்துவிட்டு, ஈழத்தமிழர்களின் பிரச்சனைகளெல்லாம் விடுதலைப்புலிகளிலிருந்தே எழுந்தன என்பதுபோல, -விழுதுகளைத் தறித்துவிட்டு, வேர்களைக் கெல்லியதாகச் காட்டிக்- கடந்துபோகமுயல்கின்றன; தென்னாபிரிக்காவிலே அமைந்ததுபோல ஒரு மெய்யறிந்து மீளிணையும் விசாரணைக்குழுவினைக்கூட அமைப்பதற்கு இவர்கள் குரலெழும்பவில்லை. ஈழத்திலே தமிழர்கள் வடக்கிலும் கிழக்கிலும் இன்னமும் அடைபட்டுப் பாதி, அவலமான நிலையிலே இராணுவநிலையமைப்புகளிடையேயும் புதிதான சிங்களக்குடியேற்றங்களிடையேயும் மீதி இருக்கும்நிலையிலே தமக்கான குரல்களை அவர்களே எழுப்பமுடியுமென்றா அகிலம் எதிர்பார்க்கின்றது? கடந்த புலத்திலுஞ் சரி, முளைத்த நிலத்திலுஞ் சரி, கடந்த ஆண்டின் சடுதியான பேரிழப்பினைச் செரித்துக்கொள்ளமுடியாத நிலையிலே எம்மிடையே ஒரு பரந்த குற்றவுணர்வு ஆழவோடிக்கிடக்கிறது. ஒரு விபத்திலே கூடப் பயணித்தவர் இறந்துபோக நாம் மட்டும் தப்பிப்பிழைத்ததினாலே நடந்தவை எல்லாவற்றுக்கும் நாமே காரணமென்பதாக எம்மை நாமே மேலும் தண்டித்துக்கொண்டு திருப்திப்படும்வகையிலே ஏற்படும் குற்றவுணர்வு இது; சென்ற ஆண்டிலே எழுதப்பட்ட கதைகளிலும் கட்டுரைகளிலும் கவிதைகளிலும் இதனை மிகவும் வெளிப்படையாகவே காணமுடியும். ஆனால், இதுவே ஈழமக்களின் சுயநிர்ணயவுரிமைகளை மறுப்பவர்களுக்கும் ஸ்ரீலங்கா அரசின் பெருங்குற்றங்களையும் மீறல்களையும் நியாயப்படுத்தியோ குழிதோண்டிப் புதைக்கவோ முயல்கின்ற அரசுகளுக்கும் எம்மை ஆடவைக்கும் கோலாகின்றது.

"மறப்போம்; மன்னிப்போம்" முதல் "இலங்கை வாழ் சகல மக்களையும் ஆரத்தழுவி உழைக்கும்மக்கள்சார்ந்த போராட்டத்தினை அதிகாரவர்க்கத்துக்கெதிராக முன்னெடுத்தல்" ஊடாக, "இந்தியாவினையும் அதன் அரசியல்வாதிகள் & அரசதிகாரிகளையும் எம் அலுவல்களைக் கவனிக்கவிடுதல்" என்பதுவரையிலான மழுங்கடிக்கும் அனைத்துக்கோஷங்களின் பின்னான அரசியலினையும் நடைமுறைச்சாத்தியமின்மைகளையும் அடுத்தவர்கள் நலன்களையும் தெரிந்து தெளிந்திருக்கவேண்fடும். இவ்விடத்திலே ஈழத்தமிழர்நலனுக்கான எதிர்ப்புச்சக்திகள் இத்தனையையும் ஒதுக்கிவைத்துவிட்டு, விடுதலைப்புலிகளைமட்டும் மீளப்பரிசீலனை செய்வதனையே மீளமீளப் பேசுவதும், ஸ்ரீலங்கா அரசூடான நாட்டைப் பலப்படுத்துதலே நொந்திருக்கும் நிலத்தமிழர்களை உடனடியாகக் காக்குமென்றும் நோக்குகளை மழுங்கடிக்க முழுநேரமாக முயற்சிக்கும். சுயமான தம் நோவினையும் வாழ்வினையும் பேச வாய்ப்போ உளநிலையோ கொண்டிராத நிலையிலிருக்கும் நிலத்தமிழர்களுக்காக, அவர்களின் கூறுகளான புலம்பெயர் தமிழர்கள் பேசமுடியாதென்று கூறும் ஸ்ரீலங்கா & இந்திய அரசுகளுக்கு, அவ்வாறு அவ்வீழத்தமிழர்களுக்காகப் பேசுமுரிமையைத் தந்தது எது? கொன்று வென்று சிதைத்திருக்கும் அதிகாரமென்றே பதில் கிடைக்கமுடியும். ஈழத்தமிழர்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் ஈழத்திலிருக்கும் அவர்களே நிர்ணயிக்கவேண்டுமென்பதிலே எதுவிதமான மாற்றுக்கருத்துமில்லை. ஆனால், இப்படியாக வென்றவர்கள் தாமே நலன்காக்கும் இடைத்தரகர்களாகக் காட்டிக்கொள்ளும்வேளையிலே, அப்படியான அதிகாரசக்திகளைத் தொடர்ந்தும் கதிரையின் விளிம்பிலே வைத்துக்கொள்ளவும் நிலத்தமிழர்களின் நோவினைத் தாங்கிக்கொள்ளவும் புலம்பெயர்தமிழர்கள் நாளாந்தம் ஏதோ விதத்திலே பேசவும் செயற்பட்டுமே ஆகவேண்டும். வருங்காலச்சந்ததிகளும் இச்சுமையினை, தாங்கள் வெறும் தற்காலிகக்காப்பாளர்களும் பேச்சாளர்களுமே என்ற அளவிலே தாங்கிச் செல்லவேவேண்டும். இதனைச் சொல்லவும் செய்யவும் எவரும் விடுதலைப்புலிகளை இயக்கரீதியாக ஆதரித்தவர்களாகவோ, நாடுகடந்த அரசு/வட்டுக்கோட்டைத்தீர்மானம் இவற்றோடு சம்பந்தப்பட்டவர்களாகவோ இருக்கத்தேவையில்லை. வெறுமனே தாயோ தம்பியோ அக்காவோ கூடப்படித்த நண்பனோ இன்னமும் அந்நிலத்திலே மிச்சமாக விடப்பட்டும் விடுமுறைக்கும் நாட்டுக்குப் போகமுடியாதிருக்கும் சாதாரண புலம்பெயர்தமிழனாகவிருத்தலே போதுமானது; இவர்களின் துயரை உணர்ந்து கொண்ட மற்றைய புலம்பெயர்தமிழராக இருத்தல் போதுமானது. சென்ற ஆண்டும் இவ்வாண்டும் மேற்கிலே நிகழும் ஊர்வலங்களிலே கலந்துகொள்கின்றவர்களிலே பலர் இவ்வாறுதான் இருக்கின்றார்கள். இத்தகு அக்கறையை வெறுமனே புலிகளின் பினாமித்தனமென்றும் பாசிசஓநாய்களின் பின்னே நடக்கும் மந்தைக்கூட்டமென்றும் புலம்பெயர்நாடுகளிலே குளிர்பதன அறைகளிலேயிருந்து தட்டச்சுகின்றதாகவும் சுருக்கியோ திரித்தோ சொல்கின்றவர்கள், இதுவரை ஈழநிலத்திலே வாழும் மக்களுக்காகச் சாதித்தவற்றின் எல்லைகள் நான்கு பதிவுகளின் எச்சமாகவும் பேஸ்புக்கின் குறிப்பேடுகளாகவும் உருவிற்றர் கீச்சுக்களின் முடக்கவிதைகளாகவுமே அடங்கிமடிந்துபோகின்றன. களத்திலே இறந்தவர்களின் பிணத்திலே பதாகை புலத்திலே கட்டிப் பிழைக்கின்றார்கள் என்ற கவிதையை எழுதிக்கொண்டிருப்பவர்களுக்கு, தினக்கூலியை விட்டுவிட்டுத்தான் வீதிகளிலே பனியிலும் வெயிலிலும் புலம்பெயர்ந்தமக்கள் பலர் விரைவீதிகளிலே கையைக் கோர்த்துக்கொண்டு இறங்கினார்களேயொழிய, "சுறா" படத்துக்குச் சூடம் ஏற்றுவதையும் விஜய் படத்துக்குப் பால்வார்க்கும் கணத்தினையும் ஐபில் கிரிக்கெட் பந்துக்குப் பந்து விவரணை இணையத்திலே செய்யும் களியாட்டத்தினையும் தவிர்த்துவிட்ட நேரத்திலல்ல என்பது புரியாமலிருக்கமுடியாது.

இந்நிலையிலே எக்காரணம் கொண்டும் புலம்பெயர்ந்த தமிழர்கள், சொந்தநிலத்திலே அகதிகளாக வாழும் தமிழர்களின் இன்றைய நிலையை மேம்படுத்த (ஸ்ரீலங்கா அரசுசார் அமைப்புகள், குழுக்கள் இவற்றினூடாக) உதவவேண்டுமென்பதனை மட்டுமே ஒற்றை நோக்காகக் கொண்டு நடக்கமுடியாது; நடக்கவுங்கூடாது. புலம்பெயர் ஈழ ஆதரவுத்தமிழர்களின் அமைப்பார்த்த குழுச்செயற்பாடுகள் அடிப்படையிலே மூன்று நோக்குகளைத் நிறைவேற்றும் திட்டங்களைக் கொண்டிருக்கவேண்டும்:

ஒன்று- கடந்த காலத்தின் ஸ்ரீலங்கா அரசினது மனிதவுரிமைமீறல்களுக்கான செயற்பாடுகளை ஆவணப்படுத்துதலும் அதற்கான நியாயமும் ஈடும் கேட்டு அகிலம்சார் நியாயம்காண்குழுவின் முன்னாலே நிறுத்துதல்;

இரண்டாவது - உடனடித்தேவையாக ஈழநிலத்திலே மக்களின் இருப்பினையும் இருப்பிடங்களையும் -ஸ்ரீலங்கா அரசின் அதிகார & பொருளாதாரக்கைகளைப் பலப்படுத்தாத வகையிலே- அகிலம்சார்ந்த அமைப்புகளோடு தம்மை இணைத்துக்கொண்டு செயற்படுவதன்மூலம் கட்டியெழுப்பலும் தக்கவைத்தலும் மேம்படுத்தலும்;

மூன்றாவது - எதிர்காலத்திலே கடந்த காலம் போல மீண்டும் ஒரு பெருங்கொலைக்களமாக நிலம்மாறாது தடுத்தலும் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணயவுரிமை உறுதி செய்யப்படும் வகையிலே நிலத்தோடு ஆரோக்கியமான உறவினைப் பேணலும் புலத்திலே இதற்கான அடித்தளமாக வரும் தன் சந்ததியினரை பொருளாதார, அரசியற்பலம் பெருக -தனித்திராது கலந்திருக்க- நிறுத்துதலும்.

21 comments:

King... said...

புலம்பெயர் சமுகத்திடம்தான் இப்பொழுது கடமை இருக்கிறது. இவ்வளவு காலம்தாழ்த்தி இதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் எப்பொழுதோ முடிவெடுத்திருக்க வேண்டிய விசயம் இது.

King... said...

அது சரி, இந்தப்பெயர் உங்களுக்கு தேவையில்லை அண்ணன்.

:)

குசும்பன் said...

//கடந்த காலத்தின் ஸ்ரீலங்கா அரசினது மனிதவுரிமைமீறல்களுக்கான செயற்பாடுகளை ஆவணப்படுத்துதலும் அதற்கான நியாயமும் ஈடும் கேட்டு அகிலம்சார் நியாயம்காண்குழுவின் முன்னாலே நிறுத்துதல்//

தூங்குகிறவனை எழுப்பலாம், தூங்குறமாதிரி நடிக்கும் உலகநாடுகளை எப்படிங்க எழுப்ப முடியும். எல்லோருக்கும் தெரியும் கடைசிகாலத்தில் போர் குற்றங்கள் நடைப்பெற்று இருக்கிறது என்று. ஆனால் கள்ள மெளனம் சாதிக்கும் இந்த பன்னாடைகளா இனிமேல் வாய் திறக்க போகிறார்கள்?:(((

Anonymous said...

இந்தப் பெயரை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே.ஒருவேளை உங்களையும் சேர்த்து 108 சேக்கள்
தமிழில் எழுதுகிறார்களோ.நீங்கள்
கடைசி நேரத்தில் கை கொடுக்கும் நிலைய வித்வானா இல்லை தமிழ்மணம் கண்டெடுத்த புத்தம் புது நட்சத்திரமா?.

தமிழ்நதி said...

தமி்ழ்மண நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள். முகப்பிலே தெரிந்துகொண்டிருக்கும் என்பதால், பிறகு வந்து வாசிக்கலாமென நினைத்திருக்கிறேன். மேலோட்டமான வாசிப்பில் பல கருத்துக்களோடு ஒத்த கருத்துக்களைக் கொண்டவளாயிருக்கிறேன். குறிப்பாக புலம்பெயர் தமிழர்களைப் பற்றியதில்.

சித்தார்த்த 'சே' க்வாடா said...

King

இது பத்தாண்டுக்கும் பழையதான பெயர் ;-)

---

குசும்பன்

/தூங்குகிறவனை எழுப்பலாம், தூங்குறமாதிரி நடிக்கும் உலகநாடுகளை எப்படிங்க எழுப்ப முடியும்/

ஒத்துக்கொள்கிறேன். அதற்குத்தான் புலம்பெயர்ந்தவர்கள் பொருளாதார, அரசியல் & ஊடகபலம் பெறவேண்டுமென்பதை முக்கியமாகக் கருதுகிறேன். விரும்பியோ விரும்பாமலோ ஐதீகத்திலும் வரலாற்றிலும் பரவின உயூதர்களின் இன்றைய பலம் சுட்டிக்காட்டுவது இதைத்தான்.

---

அநாமதேயம்

பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் அவரவர்க்கு அதது முக்கியமாகிறது பார்த்தீர்களா? இதனாலேதான் இவ்வாரத்திலே குறிப்பிட்ட கருப்பொருளிலே பதிவுகளைப் போடுவேனென்று கருதித் தமிழ்மணம் பதினைந்து இடுகைகளைப் போட்டு அதிலே பத்தை மறைத்த என்னை வால்நட்சத்திரமாக வந்துபோகக் கேட்டதோ என்னவோ?

---

தமிழ்நதி

மீண்டும் வருக; வாசிக்க

ROSAVASANTH said...

பழையவற்றையும் சேர்த்து நிறய எழுதுங்க . ஆயாசத்தை மீறி நீங்கள் எழுதுவது முக்கியம் என்றே நினைக்கிறேன்.

P.V.Sri Rangan said...

என்ன செய்ய-மீளவும், அதே யூத மக்கள்,அவர்களது பொருள்வளப்பலமென நீங்கள் குறிப்பிடுவதில் இன்னுங்கொஞ்சம் மேலே போகும் தமிழர்கள்"தாம் யூதருக்கு நிகர்"எனும் பொதுப் புத்தியோட்டம் இயற்கையில் தளம் மாறியியங்குகிறது?...


//இரண்டாவது - உடனடித்தேவையாக ஈழநிலத்திலே மக்களின் இருப்பினையும் இருப்பிடங்களையும் -ஸ்ரீலங்கா அரசின் அதிகார & பொருளாதாரக்கைகளைப் பலப்படுத்தாத வகையிலே- அகிலம்சார்ந்த அமைப்புகளோடு தம்மை இணைத்துக்கொண்டு செயற்படுவதன்மூலம் கட்டியெழுப்பலும் தக்கவைத்தலும் மேம்படுத்தலும்//

ஸ்ரீலங்காவின்"அரச-அதிகாரப் பொருளாதாரக்கைகளைப் பலப்படுத்தாத வகையில் அகிலம்சார்ந்த அமைப்புகளோடு இணைவுகுறித்துச் சொல்லும்போது அவ்வமைப்புகளென எதைக்கொள்வதில் உங்கள் ஆய்வு முனைவதெனக்கேட்பது அவசியமெனப்படுகிறது.
அகிலம்சார்ந்த அமைப்புகளெனக்கொள்ளும் நிபந்தனைக்குள் எவை வந்துள்ளன?

நாடுகடந்த அரசென்பதைக் கட்டியவர்களது பின்னாலுள்ளவர்கள் எவர்களென்பதன் கேள்விக்கப்பால் அதை மக்களது வெஜனப் போராட்டத்துக்குத் துணை நல்கக்கூடிய தெரிவாக்குவதில் அவசியமான கூறுகள் இருப்பதென்ற பார்வையைக்கொள்ளும் பட்சத்தில், அதை முன்வைத்து மகுடம் அமைக்கும் கரசேவகர்கள், தமது அதீதமான கடந்தகாலத்து அதே கதையாடிகளெனப் பிரகடனப்படுத்தும்போது,அங்கே-வன்னியில் தமது அமைப்புக்கு என்ன நடந்ததென்பதும்,தமது தலைமைக்கும் இதுவரையான செயற்பாடுகளுக்கும் இடையில் எதுவரையான அரசியல் தொடர்புகள் இருப்பதென்று திறந்த விவாதத்தைச் செய்வதென்று நான் கேட்பது, இதுவரையான மூடுமந்திரத்தில் தொலைக்கப்பட்ட அனைத்து நியாயங்களையும் மக்கள் அறிவதென்பதைவிட அந்த மக்களை நேராக அணிதிரட்டிப் போராடுவதென்பதிலும் தவறுகள்-துரோகங்கள் தொலைக்கப்பட தெரிவில் நிலத்தில் மக்கள் தம்முரிமைக்கான போரைத் தொடர்வதென்ற பேரவாவிலெனச் சுட்டுவதில் உங்கள் விளக்கம்வேண்டி...

ஸ்ரீரங்கன்

P.V.Sri Rangan said...

http://www.crisisgroup.org/~/media/Files/asia/south-asia/sri-lanka/191%20War%20Crimes%20in%20Sri%20Lanka.ashx

சித்தார்த்த 'சே' க்வாடா said...

ஸ்ரீரங்கன்

உயூதர்களை உவமித்தது அவர்கள் எப்படியாகத் தங்களின் பொருளாதாரவலுவை வைத்து இஸ்ரேல் என்ற நாட்டினை உருவாக்க மேற்கினை நிர்ப்பந்தப்படுத்தி, இன்றைக்கும் அதைத் தமது ஊடக, பொருளாதார, அரசியற்பலங்களாலே காத்துவருகின்றார்களென்றுச் சுட்டமட்டுமே.'தமிழர் உயூதருக்கு நிகர்' என்று எங்கேனும் சொல்லியிருக்கவில்லை.

---

கொண்ட தத்துவம் முக்கியமா, நடைமுறையிலே தப்பி நிலைப்பது முக்கியமா என்ற புள்ளியிலிருந்துகூட விழுந்திருக்கின்றோம். அகிலம்சார் நிறுவனங்களின் உள்ளார்ந்த செயற்பாடுகளைப் பற்றி உங்களுக்கும் தெரியும்; எனக்கும் தெரியும். ஆனால், இன்று இரண்டுக்குமிடையே எப்படியாக நாம் நகர்வதென்பதைத்தான் எண்ணவேண்டும்.

நீங்களும் புலம்பெயர்ந்து வாழ்கின்றீர்கள்; ஈழத்திலே பாதிக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுப்பதாக இலங்கையின் எல்லாமக்களையும் தழுவிப் போராட்டத்துக்கு அழைக்கின்றீர்கள். நாடுகடந்த அரசினை விரும்புகின்றவர்களும் தம் நோக்கிலே எதையோ செய்ய முயற்சிக்கின்றார்கள். நீங்கள் தொடர்ந்தும் அன்றைய தமிழீழவிடுதலைக்கழகத்தின் உணர்வுப்புள்ளியிலேயே நின்றபடி விடுதலைப்புலிகளோடும் உருத்திரகுமாரனோடும் இணையத்திலே வாளைச் சுழற்றிக்கொண்டிருக்கின்றீர்கள். இவ்விரு தளங்களையும் சேராத மற்றவர்கள் புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து ஈழத்திலிருக்கும் மக்களுக்காகக் குரல்கொடுக்கவேண்டுமென்று சொல்கிறேனென வைத்துக்கொள்ளுங்கள். இதற்கான உங்கள் எதிர்வினைஎன்னவாகவிருக்கும். ஜேர்மனியிலும் பிரான்சிலும் அமெரிக்காவிலும் கனடாவிலுமிருந்துகொண்டுதான் நாடு தழுவிய பாட்டாளிகள் புரட்சி செயும் போராட்டத்தைப் பற்றி நாம் கனவு நமக்குள்ளேயே கண்டு மாண்டுபோவதும் பக்கம்பக்கமாக தத்துவம் ஆய்வதும் எவ்வகையிலே ஈழத்திலே உடனடிக்கேனும் மக்களுக்கு உதவப்போகின்றதென்பதைச் சொல்வீர்களா? கியூபா, வெனிசூலா முதல் பாலஸ்தீனியமேற்குக்கரைவரையாக ஸ்ரீலங்கா அரசுக்காக தமது பெருவிரல் அடையாளங்களை ஜெனிவாவிலே சென்ற ஆண்டு தயான் ஜயதிலக முன்னிற்கக் குத்தியதைப் பார்த்தபின்னாலே, நீங்களும் நானும் மார்க்ஸையும் எங்கல்ஸையும் அல் தூசர், கிராம்ஸியையும் வாசித்துப் பிளந்து என்னத்தினை அம்மக்களுக்காக உடனடியாகச் சாதித்துவிடமுடியும்?

Anonymous said...

புலிகளால் நடாத்தப்பட்ட போராட்டம் என்ன மார்க்சிய வழியிலா நடந்தது? இந்தியாவில் பயிற்சி ,ஒபாமாவிடம் நம்பிக்கை போன்ற இத்தியாதிகளால் தான் இவ்வளவுமக்கள் அழிந்தார்கள்.
என்ன இப்பவும் வடுகொட்டை தீர்மானம் ? அதுதானே இரண்டு தடவையும் தோற்று போய் விட்டது.அதுதான் பாராளுமன்ற பாதையை நிராகரித்த புலிகள் ஆயுத போராட்டம் துவங்கினார்கள்.
அகதிகளாக குடியேறி வாழும் நாம் பல இன மக்களுடன் இசைவாக்கம் பெற்று வாழவில்லையா ?
இனவாததில் தமிழன் என்ன குறைந்தவனா ?
கொட்டைபாக்கு தீர்மானத்தை குப்பையில் போட்டு விட்டு இனிமேலாவது ,பல நாடுகளில் வாழும் "ஆய்வாளர்கள் " நல்ல விடையங்களை மண்டையில் ஏற்றுங்கள்.

சித்தார்த்த 'சே' க்வாடா said...

அநாமதேயம்

இத்தனை சொன்ன நீங்கள் அப்படியான நல்லவிடயங்களிலே ஒன்றையேனும் மேலோட்டமாக முன்மொழிந்திருக்கலாமே?

செந்தழல் ரவி said...

///பல நாடுகளில் வாழும் "ஆய்வாளர்கள் " நல்ல விடையங்களை மண்டையில் ஏற்றுங்கள்///

இன்னும் ஒரு தலைமுறைக்கு பிறகு புலம்பெயர் வாழ் இளைய தலைமுறை ஆணியே புடுங்கப்போவதில்லை...

நான் பார்த்தது ஒன்றை சொல்லவா ? நார்வேயில் ஒரு காஸ்ட்லி ஜிம்மில் தின்று பருத்த புட்டத்தின் கொழுப்பை குறைக்க எக்ஸர்ஸைசு செய்கிறது ஒரு புலம்பெயர் போராட்ட வாரிசு. காரை வெளியே நிறுத்திவிட்டு.சுத்தம். இவனா போராரப்போகிறான் ? ஒருவேளை மெக்டொனாஸ் பர்கரை எப்படி சிந்தாமல் தின்பது என்று போராடுவான்...

சித்தார்த்த 'சே' க்வாடா said...

/இன்னும் ஒரு தலைமுறைக்கு பிறகு புலம்பெயர் வாழ் இளைய தலைமுறை ஆணியே புடுங்கப்போவதில்லை.../

பிரித்தானியப்பாராளுமன்றத்திலே தென்னாசிய வழிவந்த உறுப்பினர்கள்குழுக்கள், அமெரிக்காவின் அரசியலிலே செயற்படும் இந்திய / பாக்கிஸ்தானிய நலன்களை முன்னெடுக்கும் அடுத்தடுத்த தலைமுறைகளைச் சேர்ந்த குழுக்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

நோர்வேயிலே புட்டம் பெருத்த ஒருத்தரைமட்டும் வைத்துக்கொண்டு, அமெரிக்காவின் PEARL இனையோ புலம்பெயர்நாடுகளிலேயிருந்த TYO இனையோ அங்குள்ள பொது அரசியலிலே ஈடுபடும் புலம்பெயர்ந்தவர்களின் அடுத்த சந்ததியினையோ மறுத்துவிடமுடியாது. இன்னமும் பேர்கரே தின்னமாட்டேனென்று நான்காவது தலைமுறையாகவும் ஆச்சாரம் காட்டும் ஆட்களைக் கண்டுகொண்டுதானிருக்கிறேன் - பேர்கருக்கு விமானநிலையத்திலே வந்திறங்கியபோதே மாறியவர்களையுங்கூட.

செந்தழல் ரவி said...

ஒருவேளை நான் பார்க்கும் கும்பல் மட்டும் தான் அப்படி செய்கிறதோ ? ஈழத்திலே பிணங்களை கழுகுகள் வட்டமிட்டவேளை, நார்வே காசு நாற்பதாயிரம் குரோனருக்கு புது சோபா வாங்கியது ஒரு குடும்பம்.

என் பார்வையில் அந்த வசதிகளும் வாய்ப்புகளுமாக வந்துவிட்டபடியால் தியாகம் நீர்த்துப்போன, i need my space and comfort வகை மனிதர்கள் மட்டும் தான் படுகிறார்களா என்று தெரியவில்லை...

சித்தார்த்த 'சே' க்வாடா said...

ரவி
இச்சோபாக்கும்பலைப் பற்றி உங்கள் பதிவிலும் அப்போது எழுதியிருந்தீர்களென எண்ணுகிறேன். சோபா வாங்காமலிருப்பதே தியாகமென்றாகிவிடுமா தெரியாது. வாழுமிடத்திலே அத்தியாவசியத்தேவையிருக்கும்போது, அதை ஒறுத்துக் கொண்டேயிருக்கவும் சொந்தப்பிள்ளைகளின் எதிர்காலத்தை நாசமாக்கவும் முடியாது. (இவன் சோபா வாங்கியிருக்கிறான் என்றோ ஊரார்பிள்ளைக்கு ஆயுதம் கொடுத்தனுப்பென்று சொல்கிறானென்றோ யாராவது விதண்டாவாதம் பின்னூட்டினால் வியப்படையமாட்டேன்; ;-))

ஆனால், அதே நேரத்திலே முழுக்கவே அங்கே நடப்பது பற்றிக் கவலைப்படாதிருக்கும், தனக்கும் அதற்கும் எவ்விதச்சம்பந்தமுமில்லை என்பதுபோலிருக்கும் ஆட்கள் எல்லாச்சமூகத்திலுமே இருக்கின்றார்கள். 'வரிப்புலியை எதிர்க்கிறேன், பிடித்த மூன்றுகாற்கொள்கைமுயலை வளர்க்கிறேன்' என்ற வகை வாதத்தை முன்வைத்து ஸ்ரீலங்காவின் தேசியகீதம் பாடும் தேனீக்களைவிட இப்படியாக நல்லதுமில்லை-கெட்டதுமில்லை ஆட்கள் எவ்வளவோ மேல்.

விழுந்த புலிகளோடு வரிகளை மாற்றிக்கொண்டவர்களைத்தான் புலத்திலும் நிலத்திலும் பதிவிலும் தமிழ்நாட்டு அரசியலிலுமே பார்க்கிறோமே!

கடைசியிலே புலிகளென்று வலையிலே கொடி போடாதிருந்த எத்தனை பல பேர்தான் நானறியச் சத்தமில்லாமல் இன்னமும் குரலை ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராக உலகலாவிய அளவிலே எழுப்பிக்கொண்டிருக்கின்றார்கள்.

செந்தழல் ரவி said...

//என்ற வகை வாதத்தை முன்வைத்து ஸ்ரீலங்காவின் தேசியகீதம் பாடும் தேனீக்களைவிட இப்படியாக நல்லதுமில்லை-கெட்டதுமில்லை ஆட்கள் எவ்வளவோ மேல்.///

சரிதான். ஏற்றுக்கொள்கிறேன்..


அதே சமயம் அதிகாரம் கிடைத்துவிட்டதென்று ஆடிய அல்லக்கைப்புலிகளையும், கோவில் குளம் வருவாரை தொட்டுத்தடவிப்பார்த்து ஆயுதம் சோதிப்போரையும், புலிப்பயம் காட்டி பணம் பறித்து சுகம் கண்டவரும் இப்போதும் அதே சுகங்களுடன் ரோலிங் சேரில் சுழல்வதையும் சமீபத்தில் கண் குளிர கண்டு மகிழ்ந்தேன்..

சித்தார்த்த 'சே' க்வாடா said...

மறுக்கவில்லை. ஆனால், இவர்களுக்காக மற்றவர்களும் அடித்துத்துவைத்து அதே கொடியிலே காயவிடப்படக்கூடாதென்பதைத்தான் சொல்கிறேன்.

புலிகளோ தனிநாடோ அல்ல முதன்நோக்கு; தனிமனிதன் இன்னொரு மனிதனுக்குச் சமனானவனென்று உறுதிப்படுத்தப்படுத்தப்படவேண்டியதேவை. அல்லக்கைகளைப் புறங்கையினாலே தட்டிவிட்டுப்போவதுதான் சரி. பிரபாகரனே என் தலைவன் என்று பதிவுபோட்டுக்ொண்டு, தன்னரசியலின் தலைவரை விமர்சித்ததுக்காக, "உங்களுக்கும் புலிகளுக்கும் இதுதாண்டா சரி" என்று கீச்சிடும் அல்லக்கைகளுக்கு ஒப்பானவை இவை

செந்தழல் ரவி said...

மறுக்கவில்லை. ஆனால், இவர்களுக்காக மற்றவர்களும் அடித்துத்துவைத்து அதே கொடியிலே காயவிடப்படக்கூடாதென்பதைத்தான் சொல்கிறேன்.

புலிகளோ தனிநாடோ அல்ல முதன்நோக்கு; தனிமனிதன் இன்னொரு மனிதனுக்குச் சமனானவனென்று உறுதிப்படுத்தப்படுத்தப்படவேண்டியதேவை. அல்லக்கைகளைப் புறங்கையினாலே தட்டிவிட்டுப்போவதுதான் சரி. பிரபாகரனே என் தலைவன் என்று பதிவுபோட்டுக்ொண்டு, தன்னரசியலின் தலைவரை விமர்சித்ததுக்காக, "உங்களுக்கும் புலிகளுக்கும் இதுதாண்டா சரி" என்று கீச்சிடும் அல்லக்கைகளுக்கு ஒப்பானவை இவை
May 19, 2010 9:08 AM////////////////

நான் இதனை ஏற்றுக்கொள்கிறேன்.

Anonymous said...

சித்தார்த்தசேக்வாடா என்பவர் புலி கப்பம் வாங்காத மாதிரி கதை சொல்கிறார்.Markham தில் கப்ப காசில் வீடு வாங்கியது எல்லோருக்கும் தெரியும்.

சித்தார்த்த 'சே' க்வாடா said...

அநாமதேயம்,
நான் எழுதியதை வாசித்துவிட்டுப் பின்னூட்டம் போட்டிருக்கலாமே?
புலி கப்பம் வாங்கியதா கப்பல் வாங்கியதா என்பது பற்றியா எழுதியிருக்கிறேன்?
புலியை வைத்துக் கப்பம் வாங்கினோரென நீங்கள் சொல்கிறவர்கள்மட்டும் பிழைப்பு நடத்தவில்லை என்றுமட்டும் தெளிவாகத் தெரிகின்றது.